மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலே 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 81 ரன்கள் குவித்தார். கையில் ஏற்பட்ட காயம் சரியான நிலையில் இன்று களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தார். கடந்த மேட்சில் பொளந்து கட்டிய பொல்லார்ட் இன்றைய ஆட்டத்தில் 12 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரகானே மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினர். 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரகானே ஆட்டமிழக்க மறுமுனையில் சூறாவளி ஆட்டம் ஆடிய ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் விளாசி 89 ரன் குவித்து அவுட்டானார்.
ஜோஸ் பட்லர் அவுட் ஆகிய பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து சீட்டுக்கட்டு சரிவது போல விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து 19.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடர்ந்து 6 முறை தோல்வியை சந்தித்துள்ள கேப்டன் கோலியின் அணி இன்றைய போட்டியிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.