தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஒரு வழியாக இன்று மாலை பிரச்சாரத்திற்கு அழைத்து வரும் நிலையில், அதற்கு முன்னராக விஜயகாந்த் ஓட்டுக் கேட்பது போல் வீடியோ ஒன்றை தேமுதிக சார்பில் வெளியிட்டுள்லினர். கடும் சிரமப்பட்டு முதுமை வாய்ந்த குரலில் விஜயகாந்த் பேசும் வீடியோவைப் பார்த்த அவரது விசுவாச தொண்டர்களும், நலன் விரும்பிகளும், அரசியலே வேண்டாம் தலைவா... நீங்க நல்லா இருந்தாலே போதும்.. நல்லா ஓய்வெடுங்க.. என்ற ரீதியில் வலைதளங்களில் பதிவிட்டு உருகுவதுடன், அதிமுகவுடனான கூட்டணியையும் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி உருவானது முதலே, விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவாரா? உடல் நிலை ஒத்துழைக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் அக்கட்சி தொண்டர்கள் இருந்தனர். கேப்டன் கட்டாயம் பிரச்சாரத்திற்கு வருவார் என்று பிரேமலதா விஜயகாந்தும் கூறி வந்த நிலையில், இன்று மாலை சென்னையில் 3 இடங்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் ஓட்டு கேட்டு பேசும் வீடியோ ஒன்றை தேமுதிக தரப்பு வெளியிட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள் போல் கடும் சிரமப்பட்டு விஐய காந்த் பேசும் காட்சிகள், துண்டு துண்டாக, வெட்டி, ஒட்டி வீடியோவாக தயாரிக்க்ப்பட்டுள்ளது. அரை நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் முரசு சின்னத்திற்கும், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்கு கேட்கிறார் விஜயகாந்த்.
விஜயகாந்த் பேசும் இந்த வீடியோவால், அவர் மேலான அனுதாபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கூடும் என்ற எதிர்பார்ப்பில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த விஜயகாந்த் மீது உண்மையான பாசம், அன்பு, விசுவாசம் கொண்ட தேமுதிக தொண்டர்களும், நலன் விரும்பிகளும் விஜயகாந்த் மீது பாசத்தை பொழிந்தபடி, தேமுதிக-அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தலைவா அரசியலே வேணாம்... நீங்க நல்லா இருந்தா போதும்... நல்லா ஓய்வெடுங்க என்றும் கட்சியை அடகு வச்சிட்டானுங்க, உங்கள வச்சி பேரம் பேசிட்டானுக, இந்தக் கூட்டணி வேஸ்ட் என்பது போலவே பெரும்பாலானோர் ஆதங்கப்பட்டு பதிவிட்டு வருகின்றனர்.