காகிதப் பைக்காக வாடிக்கையாளர்களிடம் 3 ரூபாய் வசூலித்த பாட்டா நிறுவனத்துக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றம்.
முன்பெல்லாம், பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றால் கட்டப்பை அல்லது துணிப்பைகளை எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. தற்போது, வளர்ந்து வரும் நாகரிக கலாச்சார மாற்றத்துக்கு ஏற்ப, பெரிய பெரிய மால்களும், கண்ணைக் கவரும் வாடிக்கையாளர்கள் சேவை நிறுவனங்களும் அதிகரித்து விட்டதால், அவ்வழக்கம் காணாமல் போனது. பணம் கொடுத்து பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் தற்போது இலவசமாகக் காகிதப் பைகூட தருவதில்லை நிறுவங்கள்.பெரும்பாலானோர் இதைக் கண்டுகொள்வதில்லை.
ஆனால், வாடிக்கையாளர்களிடம் காகிதப்பை பைக்காகப் பணம் வசூலிப்பது தவறு என சுட்டிக்காட்டி நீதிமன்றம் வரை சென்று, அதில் வெற்றியும் கண்டுள்ளார் தினேஷ் பிரசாத் ரத்தோரி என்பவர்.
பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான பாட்டா, நிறுவனத்தின் செக்டார் 22D பகுதியில் அமைந்துள்ள ஷோரூமில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று 1 ஜோடி பாட்டா செருப்பு வாங்கியுள்ளார் தினேஷ். அப்போது, காகிதப் பைக்காக அவரிடம் மூன்று ரூபாய் வாங்கியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளாத அவர், சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், ‘ரூ.399க்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கியதாகவும் ஆனால் தன்னிடம் இருந்து ரூ.402 பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், காகிதப்பைக்காக மூன்று ரூபாய் வசூலித்து ஏற்புடையது அல்ல என வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். அதோடு, நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக காகிதப் பைகளை வழங்குவது அந்நிறுவனத்தின் கடமை. ஆனால், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்தி பைகளை வாங்க செய்து, பணம் வசூலிக்கின்றன என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், பாட்டா நிறுவனத்துக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து மட்டுமல்லாமல் தினேஷ் பிரசாத் ரத்தோரியிடம் வாங்கிய 3 ரூபாயை திருப்பி செலுத்தும் படி உத்தரைட்டது நீதிமன்றம்.