கர்நாடாகவில் மக்களவை தேர்தலில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான சவிதா மோனிஸ் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார்.
நாடாளுமன்ற தோ்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதேசமயம் பல வாக்காளர்கள் தங்களது வாக்குரிமை பயன்படுத்தாமல் வீணடித்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு தேர்தலின்போது தனது செயல் வாயிலாக புத்திமதி சொல்லி வருகிறார் கர்நாடக பெண் ஒருவர்.
கர்நாடகா மாநிலம் மங்களூரூவை சேர்ந்தவர் சபிதா மோனிஸ். அவர் பிறக்கும்போதே தனது இரண்டு கைகளையும் இழந்து விட்டார். தற்போது 30 வயதாகும் சபிதா மோனிஸ் இதுவரை சாதாரண வேலைகளை மற்றவர்களை போல் செய்து வருகிறார். இவர் தனது தடைகளை தகர்த்து சாதனை படைத்து வருகிறார். அவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும், அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.
அதுபோல் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தக்ஷின் கன்னடா பகுதியிலுள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஒருவர் வாக்களித்தால் அவருக்கு இடதுகை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும். ஆனால் சபிதாவுக்கு இரண்டு கைகளும் இல்லாததால் அவரது கால் விரலில் மை வைக்கப்பட்டது.