இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கு மருதநாயகம் படப் பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் பொன்பரப்பியில் நேற்று முன்தினம் தேர்தலின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை ஒரு பிரிவினர் சாலையில் போட்டு உடைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினர், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, இரு கட்சியினர்களிடேய வன்முறை வெடித்தது. இதனால், ஒரு பிரிவினர் வசிக்கக்கூடிய பகுதியில் புகுந்த மற்றொரு பிரிவினர், 20க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், பொன்பரப்பியில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இருவர் அவதூறாகப் பேசிய வீடியோ இன்று(ஏப்.,20) வெளியானதால், அப்பகுதியில் பிரச்னை எழுந்தது. இதனால், எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரியலூர் மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில், மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 'மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனை துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி - இங்கு ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல் இது. இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.