முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சையாகப் பேசிய கமலின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கமல் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து .அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கமலுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு அவரை வசை பாடி வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, கமலின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக நடிக்கும் கமலின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகின்றனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீராப்பாய் பேசியிருந்தார்.
தனது பேச்சுக்களுக்கு எழுந்த எதிர்ப்பைக் கண்ட கமல், கடந்த 2 நாட்களாக தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது கட்சியினருடன் கமல் ஆலோசனை நடத்தினார். அதன் பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் மாண்பையும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்டவிரோதமாக கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவிப் பிரமாணத்தின் போது எடுத்த உறுதி மொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.