கன்னியாகுமரி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹெச்.வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்வதால், நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியாகிறது. அந்த தொகுதியை காங்கிரஸ் மீண்டும் கேட்கிறது. ஆனால், தி.மு.க. அதை விட்டு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. அதிலும் கருணாஸ், தமிமுன் அன்சாரி, ரத்தினசபாபதி, பிரபு போன்றவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக சென்றார்கள். அதனால், 22 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வென்றாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் 8 தொகுதிகளை பெற்றுள்ளது. இதனால், தற்போது அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. ஆனாலும், நான்கைந்து எம்.எல்.ஏ.க்கள் மாறினாலும் ஆட்சிக்கு நெருக்கடிதான். இந்த சூழலில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் ஒரு எம்.எல்.ஏ. என்றால் கூட இழந்து விட விரும்ப மாட்டார்கள்.
தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹெச்.வசந்தகுமார், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்துள்ளார். வசந்தகுமார் ஏற்கனவே நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் எம்.பி.யாகி விட்டதால், 14 நாட்களுக்குள் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அதனால், நாங்குனேரிக்கு இடைத்தேர்தல் வரும். ஏற்கனவே தங்களிடம் உள்ள தொகுதி என்பதால், காங்கிரசே இதில் போட்டியிடும் என்று அந்த கட்சியினர் கூறுகிறார்கள்.
ஆனால், இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணத்தை அள்ளி வீசுவார்கள். மேலும் பல யுக்திகளை கையாளக் கூடும். எனவே, காங்கிரசுக்கு தராமல் தி.மு.க.வே போட்டியிட்டால்தான் வெல்ல முடியும் என்று தி.மு.க.வினர் பேசத் தொடங்கியுள்ளனர். எனவே, நாங்குனேரியை காங்கிரசுக்கு தி.மு.க. விட்டு தருமா என தெரியவில்லை.