நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக வாக்குகளை கணிசமாக பிரித்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் நம்பிக்கைதான் பெருத்த ஏமாற்றமாகி பொய்த்துப் போனது எனலாம்.38 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அமமுக ஒட்டு மொத்தமாகப் பெற்ற வாக்குகள் 21 லட்சத்து 86 ஆயிரத்து 336 வாக்குகள். இது 5.27% ஆகும். அக்கட்சியின் வேட்பாளர்கள் விருது கர், திருச்சி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்மாவட்டங்களில் மட்டுமே ஓரளவுக்கு சாதிக்க முடிந்த அமமுக, கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்ட தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெறவில்லை.
சீமானின் நாம் தமிழர் கட்சி நீலகிரி தொகுதி தவிர்த்து 37 தொகுதிகளில் மொத்தம் 16 லட்சத்து 29 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 3.86% வாக்குகள் பெற்றுள்ள சீமான் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலுமே பரவலாக வாக்குகள் திடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிக பட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 78 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்றுள்ளது.
இதே போல் புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமலும் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளார். காஞ்சிபுரம், பெரம்பலூர் தவிர்த்து 36 தொகுதிகளில் களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகளுடன் 3.72% எட்டியுள்ளார். கமல் கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர் .குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடம் கமல் கட்சிக்கு அமோக வரவேற்பு கிட்டியுள்ளது.கோவை, ஸ்ரீபெரும்புதுர், வட சென்னை தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், மத்திய சென்னை, திருவள்ளுர், சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, விருதுநகர் தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஒட்டு மொத்த சதவீத அடிப்படையில் இந்த 3 கட்சிகளும், பாஜா (3.66%) மற்றும் தேமுதிக (2.19%) ஆகிய கட்சிகள் பெற்றதை விட கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் திமுக 32.76%, அதிமுக 18.48%, காங்கிரஸ் 12.76% ., பாமக 5.42% வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.