எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பாமக ராமதாஸை விமர்சித்த முரசொலி

by Nagaraj, May 28, 2019, 12:01 PM IST

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே... என்ற பாடலை சுட்டிக்காட்டி பாமக தலைவர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளிதழ்.இதுகுறித்து முரசொலியில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை எனப் பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்கமுடியும். தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர, எனக்குள் எந்தவிதக் கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மைதான்; அய்யாவுக்கு எப்படி கவலை வரும்; பல தலைமுறைகளை வளப்படுத்திக் கொள்ளும் அளவு, வரவேண்டியதெல்லாம் வந்துவிட்டது.

மகன் தோல்வியை முன்னரே ஊகித்து, ஒரு `ராஜ்யசபா' எம்.பி. சீட்டையும் முன்னதாகவே `ரிசர்வ்' செய்து வைத்தாகி விட்டது; அய்யாவுக்கு கவலையோ கலக்கமோ ஏன் ஏற்படப்போகிறது? அய்யாவை நம்பி களத்தில் இறங்கி சொத்து-பத்துக்களை விற்று தேர்தலைச் சந்தித்து இன்று நடுத்தெருவுக்கு வந்திருக்கும் அவரது பாட்டாளிச் சொந்தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி, அய்யாவுக்கு எப்படி ஏற்படமுடியும். நடப்பு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க.கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி, சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா.

மத்தியில் நீங்கள் விரும்பிய ஆட்சியே வந்துவிட்டது. அப்படி இருக்க, உங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம்? எம்.பி.யாக இருந்தால்தான் செய்யமுடியுமா? மோடி அவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன் - உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்குப் பயணித்தாரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்குப் பங்காற்றக்கூடாதா?

தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை; தமிழக நலனே என் நலன். நாம் எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது.மத்தியில் மீண்டும் அமைந்துள்ள மோடி தலைமையிலான அரசு நமது அரசு. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்ற அந்த அரசிடம் எடுத்துச் சொல்லி தேவையான அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறியிருந்தால், உங்கள் உயரிய நோக்கத்தைப் பாராட்டியிருக்கலாம்.

ஆனால் பொறுப்பை நீங்கள் உதறித் தள்ளிவிட்டு, கூட இருக்கும் ஒரு சில அப்பாவி பாட்டாளிச் சொந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து, பொறுப்பற்ற நிலையில் ஒரு அறிக்கை விடுகிறீர்களே; இது நியாயமா? அறிக்கையின் முடிவில் பாட்டாளிகளை வீறுகொண்டு எழக் கேட்டுள்ளீர்கள். அத்துடன் விடவில்லை.
மக்களின் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராட அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.

கட்சித் தொண்டர்கள் காதிலே பூச்சுற்ற ஒரு அளவில்லையா? முழம் முழமாகச் சுற்றத் தொடங்கியுள்ளீர்களே; நியாயமா? நீங்கள் ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும்! அப்படி இருக்க, மக்களின் பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியது தானே. அதை விடுத்து போராட அழைப்பதேன்?

சரி, அதை எல்லாம் விடுங்கள்; தேர்தலில் கூட்டணி அமைத்தபோது ஒரு பத்து அம்சத் திட்டத்தைக் கூறி; அதனை ஏற்றுக் கொண்டதால்தான் நான் அ.தி.மு.க. அணியோடு கூட்டணி சேர்ந்தேன் என்று நிருபர்களைக் கூட்டி வைத்துப் பேட்டி தந்தீர்களே?
அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றிடுவீர்களா; அதற்கும் "பெ... பெ..." தானா? தேர்தல் தோல்விக்குத் துவள வேண்டாம் என அறிக்கை விட்டுவிட்டீர்கள்; பத்து அம்சமும் பஞ்சாய்ப் பறக்கிறது; அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? அடுத்து கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சு உடன்படிக்கைப்படி ஒரு `ராஜ்ய சபா' சீட்டு பாக்கியிருக்கிறது. அதை அன்புமணிக்குத் தயார் செய்யுங்கள்; கூட்டணி வைத்துத் தோல்விதானே கண்டோம் என அந்த`சீட்'டைத் தராது கைவிரித்து விடப்போகிறார்கள்.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒலிபரப்பாகும் "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே... சொந்த நாட்டிலே...'' எனும் பாடல் காதிலே விழுகிறது. அய்யாவுக்கு அந்தப் பாடலை சமர்ப்பணமாக்குகிறோம் என முரசொலியில் டாக்டர்.ராமதாஸை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது.

Get your business listed on our directory >>More Politics News

அதிகம் படித்தவை