சட்டமன்றத் தேர்தல் வேலையை துவக்கியது மக்கள் நீதி மய்யம்

M.N.M. starts assembly election work

by எஸ். எம். கணபதி, May 28, 2019, 12:35 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் 3.72 சதவீத வாக்குகளை பெற்றுள்ள மகிழ்ச்சியில் கமலின் மக்கள் நீதி மய்யம், சட்டமன்றத் தேர்தல் பணிகளை இப்போதே துவக்கியுள்ளதாம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து மறைந்ததால், தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களே இல்லை என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அரசியலுக்கு வருவதாக ஆண்டுக்கணக்காக சொல்லி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருந்த ரஜினியில் துவங்கி, கமல், விஜய், விஷால், பிரகாஷ்ராஜ் என்று திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அரசியல் ஆசை வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ரசிகர்களை அழைத்து பேசி, கட்சிக்கான அறிவிப்பு வெளியிட்ட ரஜினி திடீரென முடங்கினார். சட்டமன்றத் தேர்தலுக்குத்தான் வருவேன் என்று கூறி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். ஆனால், கமல் அப்படியில்லை. மக்கள் நீதி மய்யம் என்று கட்சி ஆரம்பித்து எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கினார்.

தேர்தலில் பிரச்சாரத்திற்கு பல கோடி ரூபாய் செலவிட்டார். அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது? பா.ஜ.க.வின் ‘பி’ டீம்தான் இவர். மோடி எதிர்ப்பு வாக்குகளை இவரைக் கொண்டு பிரித்து, தாங்கள் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. மறைமுகமாக நிதி அளிக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனாலும் கமல் சளைக்காமல் பிரச்சாரம் செய்தார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கமல் கட்சி 3.72 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. இது அவர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இது குறித்து ம.நீ.ம. கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் கூறுகையில், ‘‘இந்த தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை வீசியது. அந்த மோடி எதிர்ப்பு வாக்குகள்தான் தி.மு.க. கூட்டணிக்கு விழுந்துள்ளதே தவிர, அந்த கட்சிகளுக்காக விழுந்த வாக்குகள் அல்ல.

எனவே, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த வாக்குகளை நாங்கள் பெறுவோம். சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் அமோக வெற்றி பெறுவோம். அதற்காக இப்போதே தேர்தல் பணியை துவக்குகிறோம். வேட்பாளர்களிடம் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு, இப்போது முதலே சட்டமன்ற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறோம்’’ என்றார்.

மகேந்திரன், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 44 ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறார்.

You'r reading சட்டமன்றத் தேர்தல் வேலையை துவக்கியது மக்கள் நீதி மய்யம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை