தமிழிசை பதவிக்கு நீங்கியது ஆபத்து

Tamilisai not being removed from the post of president of Tamil Nadu BJP

by எஸ். எம். கணபதி, May 28, 2019, 10:26 AM IST

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிக்கு ஆபத்து நீ்ங்கியுள்ளது. அவரே தலைவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வலுவான கூட்டணியை உருவாக்கியது. தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு வரை, யாருடன் கூட்டணி என்பதே தெரியாமல் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எல்லா கட்சியையும் பட்டும்படாமலுமாக விமர்சித்து வந்தார்கள். தேர்தல் நெருங்கிய சமயத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். அப்போது அவர், பா.ஜ.க.வுடன் முன்பு கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்து விட்டு சென்றார்.

அதன்பின், ரகசிய பேரங்கள் நடந்து முடிந்து, அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என்று பல கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி உருவாக்கப்பட்டது. எனினும், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் தோற்றது. நாகர்கோயிலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரும் கூட தோல்வியைத் தழுவினர்.

மேலும், கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமைந்தது. அப்போது இதே பா.ம.க, தே.மு.தி.க.வுடன் ம.தி.மு.க.வும் இடம்பெற்றிருந்து. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. துணையில்லாமலேயே அந்த தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனும், பா.ம.க.வின் அன்புமணி ராமதாசும் வென்றனர். அந்த தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 5.56 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

ஆனால், இந்த முறை தமிழகத்தில் உள்ள பெரிய கட்சி, அதுவும் மாநிலத்தை ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தும் கூட கடந்த முறை வென்ற பொன்.ராதாகிருஷ்ணனே தோற்றிருக்கிறார். தேர்தலில் பெற்ற வாக்குசதவீதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக சென்று விட்டது. இந்த படுதோல்விக்கு காரணம், பா.ஜ.க. எதிர்ப்பு அலைதான் என்று பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே, மாநில தலைவர் பதவியில் இருந்து தமிழிசை நீக்கப்படுகிறார் என்று செய்திகள் பரபரக்கத் தொடங்கி விட்டன. அடுத்த தலைவர் யார் என்று மீடியாக்களில் விவாதிக்கத் தொடங்கினர். ஆனால், தமிழிசை பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை. அவர் இப்போதைக்கு மாற்றப்பட மாட்டார் என்று டெல்லி பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2014ம் ஆண்டு மோடி முதன்முதலாக பிரதமராக பதவியேற்ற போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட தமிழக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் உரிய மரியாதை தரப்படவில்லை. இதனால், அவர்கள் மனம் நொந்தனர். மோடி பதவியேற்ற சில நாட்களிலேயே பா.ஜ.க. கூட்டணியை உதறித் தள்ளினர். ஆனால், இந்த முறை அந்த பிரச்னை வரக் கூடாது என்று பா.ஜ.க. மேலிடம் கருதுகிறதாம். அதனால், கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து வரும் பொறுப்பை தமிழிசையிடமே ஒப்படைத்திருக்கிறது.

தற்போதைக்கு கர்நாடகா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை வீழ்த்தி, பா.ஜ.க. ஆட்சியை அமைக்க பா.ஜ.க. மேலிடம் நடவடிக்கை எடுக்கப் போகிறதாம். அந்த மாநிலங்கள் எல்லாம் முடிந்த பிறகுதான், தமிழகத்தை கவனிப்பார்கள் என்றும் அது வரை தமிழிசை பதவிக்கு ஆபத்து இல்லை என்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள்.

You'r reading தமிழிசை பதவிக்கு நீங்கியது ஆபத்து Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை