மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து, பினராயி விஜயனும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக நாளை(மே30) இரவு 7 மணிக்கு பதவியேற்கிறார். அவரது அமைச்சரவையில் யார், யார் இடம் பெறப் போகிறார்கள் என்று டெல்லியி்ல் பரபரத்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக குடைசல் கொடுக்கும் பணியையும் பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தாவின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 56 கவுன்சிலர்களை பா.ஜ.க. இழுத்து கொண்டது. எனினும், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக மம்தா கூறியிருந்தார். ஆனால், இன்று(மே29) திடீரென திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ. மணிருல் இஸ்லாம் என்பவர் பா.ஜ.க.வில் இணைந்தார். மேலும், திரிணாமுல் கட்சியினரின் வன்முறையால் 54 பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்பட்டதாக கூறி, அவர்களின் குடும்பத்தினரை மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைத்து செல்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட காட்டமான அறிக்கை வெளியிட்டு, மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை என்று அறிவித்திருக்கிறார். கேரள அரசு தரப்பில் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். காலை 11.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் இரவு பதவியேற்பு விழாவில் பங்கேற்று விட்டு, மறுநாள் பெங்களூருவுக்கு திரும்புகிறார்.