கர்நாடகாவில் ஊசலாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, ‘ஆபரேஷன் கமலா’ வை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், முதலமைச்சர் பதவியை ம.ஜ.த. கட்சித் தலைவர் குமாரசாமிக்கு விட்டு கொடுத்தது. ம.ஜ.த. கட்சி வெறும் 37 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு சட்டமன்றத்தில் 3வது இடம்வகிக்கிறது. ஆரம்பம் முதல் கூட்டணிக்குள் சலசலப்பு காணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரசில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியமைக்க பா.ஜ.க. திட்டமிட்டது. அந்த கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இன்னும் 7 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதும். சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்து விடலாம். இதனால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்தது. இந்த ரகசிய பிளானுக்கு ‘ஆபரேஷன் கமலா’ என்று தலைப்பிட்டு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. எனினும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 25ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ், ம.ஜ.த, கூட்டணி வெறும் 3 தொகுதிகளில்தான் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரசில் மீண்டும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. ம.ஜ.த. கூட்டணியை முறிக்க சிலர் முயன்று வருகின்றனர்.
இந்த சூழலில், பா.ஜ.க. மீண்டும் ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜரிகோலியை, பா.ஜ.க.வின் எம்.பி. உமேஷ் ஜாதவ் மற்றும் சி.பி.யோகீஸ்வர் ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு இந்த சந்திப்பு நடந்துள்ளது. உமேஷ் ஜாதவ், யோகீஸ்வர் ஆகியோரே பா.ஜ.க.வில் ஆபரேஷன் கமலா டீமாக செயல்படுகிறார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
தற்போதைக்கு காங்கிரசில் பசனகவுடா, பி.சி.பாட்டீல், ஸ்ரீமந்த் கவுடா, சிவராம் ஹெப்பர், பிரதாப்கவுடா, ஜே.என்.கணேஷ், நாகேந்திரா மற்றும் ம.ஜ.த. கட்சியின் நாராயண கவுடா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பேரத்திற்கு படிந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஆளும் கூட்டணியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களிடம் ரமேஷ் ஜரிகோலி பேசி வருகிறாராம். அவர்கள் எல்லோரும் ஓ.கே. சொல்லி விட்டால், கோவாவில் நட்சத்திர ஓட்டலில் 30 ரூம் புக் செய்து, அங்கு அழைத்து செல்லப்படுவார்கள். அதன்பின்பு, குமாரசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சி கவிழ்க்கப்படும். அல்லது அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள். அதனால், காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசு கவிழும். அதன்பின், மீண்டும் அவர்களுக்கு பா.ஜ.க.வில் சீட் தரப்பட்டு வெற்றி பெற வைக்கப்படுவார்கள் என்றும் பேசப்படுகிறது.