மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக கொடிக்குன்னில்?

Congress may pick MP from kerala to be Leader of party in Lok Sabha

May 26, 2019, 14:05 PM IST

மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக சுரேஷ் கொடிக்குன்னில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.


கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 45 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் இழந்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற குறைந்தது 54 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் தற்போதும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறும் வாய்ப்பை இழக்கிறது.
ஆளும் பா.ஜ.க. மனமிறங்கினால், போதிய எண்ணிக்கை இல்லாவிட்டாலும் 2வது பெரிய கட்சிக்கு அந்த பதவியை அளிக்கலாம். ஆனால், கடந்த 2014ம் ஆண்டிலேயே அந்தப் பதவியை தர மறுத்த பா.ஜ.க. அரசு இப்போது காங்கிரஸ் மீது இன்னும் அதிக வெறுப்பைக் காட்டுவதால், நிச்சயமாக இந்த முறையும் யாருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்படாது.


இந்நிலையில், 2வது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை குழு தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த முறை கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை அவர் தோற்று விட்டார். மேலும், இம்முறை கேரளாவில் அதிகபட்சமாக 15 தொகுதிகளிலும், தமிழகத்தில் 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கிறது. எனவே, இம்முறையும் தென்மாநிலங்களில் இருந்து ஒருவரையே காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவராக தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அந்த வகையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் வென்ற கட்சியின் தலைவர் ராகுல்காந்தியே, மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனாலும், அவர் அந்தப் பதவியை வேறொருவருக்கு விட்டு தரக்கூடும் என்று பேசப்படுகிறது. அப்படியெனில் கேரளாவில் மாவேலிக்கரா தொகுதியில் வென்ற சுரேஷ் கொடிக்குன்னிலுக்கு அந்த பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அவர் தற்போது 7வது முறையாக மக்களவையில் தேர்வு செய்யப்படலாம். அவர் இல்லாவிட்டால், முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகன் முரளீதரன் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

You'r reading மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக கொடிக்குன்னில்? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை