இந்தியத் திருநாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதால், விழா நடைபெறும் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோலா கலமாகக் காட்சியளிக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர்.இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியுடன் 70 பேர் வரை அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
மத்திய அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கடந்த இரு நாள்களாக தீவிர ஆலோசனை நடத்தினர்.பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தரப்படும் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பாஜகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கும் அமைச்சரவையில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இது தவிர சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட இருக்கிறது.
இந்த பதவியேற்பு விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
முதலில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகக் கூறிய மம்தா, பின்னர் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறைகளில் 54 பாஜகவினர் கொலை செய்யப்பட்டதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்கவில்லை.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
ஆனால் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில், கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகிய சம்பவங்கள், இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகப்படுத்தின.
இந்தச் சூழலில், இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்வான பிரதமர் மோடியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, நமது பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று இம்ரானிடம் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், மோடியின் பதவி யேற்பு விழாவில் பங்கேற்க இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த முறைபோல இந்த முறையும் குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் திறந்த வெளியில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
பொதுவாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். எனினும், அதிக அளவில் விருந்தினர்கள் பங்கேற்பதால் கடந்தமுறையைப் போல இப்போதும் வெளிமுற்றம் தேர்வு செய்யப்பட்டது. இந்த முறை 8,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வளவு அதிகமானோர் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும், பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இவ்வளவு அதிகமானோர் பங்கேற்பதும் இதுவே முதல்முறை.
இந்த விழாவில் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டமைப்பில் வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன.
மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமார் தாய்லாந்து சார்பில் சிறப்புத் தூதர் கிரிசாடா பூன்ராச், மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவ், பூடான் பிரதமர் லோட்டே ஸ்ரிங், வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாலை 7 மணிக்கு பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சமாதி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.