கருப்பு பணத்தை வாங்க மறுத்தேன், ஆத்திரமடைந்தார் ஜெயலலிதா: கமல் மனம்திறந்த பேட்டி

Jayalalithaa Miscalculated What I Would Do For Self-Respect: Kamal Haasan

by எஸ். எம். கணபதி, Jun 6, 2019, 18:10 PM IST

‘‘கருப்பு பணத்தை வாங்க மறுத்தேன், அதனால் ஜெயலலிதா என் மீது ஆத்திரம் கொண்டு விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தார். அதற்கு பிறகும், தொடர்ந்து எனக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது’’ என்று ஜெயலலிதா குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். அடுத்த கட்டமாக, பிக்பாஸ் நிகழ்ச்சி, சட்டமன்றத் தேர்தல் என்ற வேகமாக சென்று கொண்டிருக்கும் அவர், ஒரு பரபரப்பான பேட்டி அளித்திருக்கிறார். "Defining India through their eyes'' என்று சோனியா சிங் எழுதிய புத்தகத்தில் அவரது பேட்டி வெளியாகியுள்ளது. அதில் கமல் கூறியிருப்பதாவது:

விஸ்வரூபம் படத்தை, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பும் உரிமை கோரினர். இது நேரடியான விற்பனை என்பதுடன் அதிக தொகை கிடைக்கும் என்பதால், நான் மறுக்கவில்லை. அவர்கள் ஒரு தொகையை கூறினார்கள். நான் அதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், அதில் குறிப்பிட்ட தொகையை கருப்பு பணமாக தருவதாக கூறினார்கள். நான் எப்போதுமே கருப்பு பணமாக வாங்குவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால், அதற்கு உடன்பட மறுத்தேன். ஆனால், என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள நான் எவ்வளவு தூரம் செல்வேன் என்று ஜெயலலிதா தப்பாக கணக்கு போட்டு விட்டார்.

அதற்குப் பிறகு 2 பேர் வந்து விஸ்வரூபம் படத்தைப் பார்த்தனர். ஒருவர் ஜெயலலிதாவுக்கு வேண்டிய போலீஸ் அதிகாரி. இன்னொருவர் ஜெயா டி.வி. தலைமை அதிகாரி. அதற்கு பிறகு அவர்கள் படத்தில் பிரச்னை இருக்கிறது என்று சென்சார் போர்டுக்கு சொன்னார்கள். முழுக்க, முழுக்க ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது.
அதற்கு பிறகும் சென்சார் போர்டு படத்தை ஓ.கே. செய்தது. ஆனால், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கூறி படத்தை தடை செய்தது. அதற்குப் பிறகு இது எனக்கும், ஜெயலலிதாவுக்குமான தனிப்பட்ட விரோதமாகி விட்டது. என் மீது அவர் ஆத்திரம் கொண்டார்.

நான் ஜெயலலிதாவிடம் போய் பிச்சை கேட்பேன் என்று எதிர்பார்த்தார்கள். அதைத்தான் பலரும் எனக்கு ஆலோசனையாக சொன்னார்கள். நான் அதை செய்யவில்லை. நான் நீதிமன்றம் சென்று அந்த தடையை நீக்கி வந்தேன். அடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று பிரிமியர் ஷோ போடுவதற்கு புறப்பட்டு சென்றேன். நான் நடுவழியில் விமானத்தில் இருக்கும் போது, பைலட் மூலமாக எனது சகோதரரிடம் இருந்து போனில் தகவல் வந்தது. விஸ்வரூபம் படத்தை மீண்டும் தடை செய்து விட்டார்கள் என்று.

அதாவது, நான் விமானம் ஏறி விட்டேனா என்பதை அறிந்த பின்பு எனக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இறங்கியதும் எனக்கு ரிட்டர்ன் டிக்கெட் ரெடியாக இருந்தது. ஆனால், நான் தைரியமாக லாஸ் ஏஞ்சல்ஸில் படத்தை ரிலீஸ் செய்தேன். ஒரு கலைஞன் துணிவுடன் அப்படி செய்ய முடியாது. ஆனால், நான் செய்தேன். சில வெளிமாநிலங்களிலும் திரையிடப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டதால், மலேசியா, துபாய் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் திரையிடப்படவில்லை. என்னை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்குமாறு பலர் கூறினர். நான் முடியவே முடியாது என்று கூறி விட்டேன்.

அதற்குப் பிறகு, எனக்கு கடன் கொடுத்த பைனான்சியர் எனது சொத்துக்களை எல்லாவற்றையும் எழுதி வாங்கிக் கொண்டார். அப்போதுதான், நான் சொன்னேன், ‘‘இதற்கு மேலும் என் படத்தை அனுமதிக்காவிட்டால், ஜனநாயகம் உள்ள வேறு மாநிலத்திற்கோ, வேறு நாட்டிற்கோ நான் செல்வேன். முதலில் ஒரு எம்.எப்.ஹுசைன். இப்போது ஒரு ஹாசன்’’ என்று சொன்னேன்.

அப்போது அந்த அரசியார் (ஜெயலலிதா) சொன்னார். ‘‘கமல்ஹாசன் ஒன்றும் குழந்தை அல்ல. 58 வயது ஆள். அவர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார். யார் அவரது பணத்தை எடுத்து செல்கிறார் என்பதெல்லாம் வியாபாரம். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், எல்லா இடத்திலும் காவல் காப்பதற்கு தேவையான அளவு போலீஸ் படை கிடையாது’’ என்று சொன்னார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் அரசியல் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி, மத்திய அரசு அதை காப்பாற்றட்டுமே... இப்படியாக நான் மிகவும் சோர்ந்து போனேன் அந்த கால கட்டத்தில்...
இவ்வாறு கமல் கூறியிருக்கிறார் அந்த புத்தக பேட்டியில்.

You'r reading கருப்பு பணத்தை வாங்க மறுத்தேன், ஆத்திரமடைந்தார் ஜெயலலிதா: கமல் மனம்திறந்த பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை