அதிமுக பொதுக் குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கடி?

EPS plans to conduct admk general council meet soon

by எஸ். எம். கணபதி, Jun 8, 2019, 13:59 PM IST

அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம்.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இருக்கிறார்கள். கட்சிக்கு தலைமை ஓ.பி.எஸ். என்பது பெயரளவுக்குத்தான். ஜெயலலிதாவைப் போல் ஆளுமைமிக்க தலைமையாக அவர் செயல்பட முடியவில்லை . காரணம், ஆட்சிக்கு தலைமையேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியிடம்தான் அதிகாரம் இருக்கிறது. இதனால், டெல்லியில் ஆளும் பா.ஜ.க.வின் தயவோடு ஆட்சியையும் கைப்பற்ற பல்வேறு ரகசிய முயற்சிகளை ஓ.பி.எஸ். தரப்பு மேற்கொண்டது.

ஆனால், எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் நேரடியாக மத்திய அமைச்சர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, காய்களை நகர்த்துவதால், ஓ.பி.எஸ். தரப்பால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில், அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான தனது மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சர் ஆக்க ஓ.பி.எஸ். முயன்றார். இதற்காக அமித்ஷாவை சந்தித்து மகனுக்கு பதவி கேட்டார்.

இதையடுத்து, எடப்பாடி தரப்பில் அதற்கு உடனடியாக செக் வைத்தனர். ரவீந்திரநாத் இளையவர் என்பதால், ராஜ்யசபா உறுப்பினராக உள்ள சீனியரான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று பா.ஜ.க.விடம் கோரிக்கை விடுத்தனர். இவர்கள் சண்டை காரணமாக, அமைச்சரவை முடிவில் இவர்களை பா.ஜ.க. மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில், எடப்பாடி தரப்புக்கும், ஓ.பி.எஸ். தரப்புக்கும் மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இது குறித்து கடந்த 2 நாள் முன்பு நமது இணையதளத்தில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையே கட்சியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற போட்டி வந்து விட்டது.

இது இப்போது வெளிப்படையாக பூகம்பம் போல் வெடித்திருக்கிறது. மதுரை முன்னாள் மேயரான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, இன்று நிருபர்களுக்கு பரபரப்பான பேட்டி அளித்தார். அதில், கட்சிக்கு ஒருவரே தலைவராக இருக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்டி அதை முடிவு செய்ய வேண்டும் என்று அவர் பகிரங்கமாக கோரினார். அவர் கூறுகையில்...

அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர் கட்சிக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு ஒரே தலைமைதான் இருக்க வேண்டும். இரட்டைத் தலைமை இருப்பதால் கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது.

2 தலைமை இருப்பதால் கட்சியால் எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்துவோம். அதற்கு விரைவில் பொதுக் குழுவை கூட்டி, தோல்விக்கான காரணங்களையும் ஆராய வேண்டும்.

இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறினார்.

ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனிடம் தோற்றார். தேர்தலுக்கு முன்பு, ராஜ்சத்யனுக்கு சீட் தர விடாமல் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முட்டுக்கட்டை போட்டார். ராஜ கண்ணப்பனை அழைத்து வந்து அவருக்கு சீட் தருமாறு சண்டை போட்டார். அதனால், முட்்டல் மோதல் ஏற்பட்டு, கடைசியில் ராஜ்சத்யனுக்கு சீட் தரப்பட்டது. அதற்கு பதிலாக புறநகர் மாவட்டத்தைப் பிரித்து ஒரு மாவட்டத்்திற்கு செயலாளராக உதயகுமாரை நியமித்தனர்.

அது மட்டுமல்ல, உதயகுமார் தேர்தலின் போது ராஜ்சத்யனுக்கு பிரச்சாரம் செய்யாமல், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகனுக்கு பிரச்சாரம் செய்யச் சென்றார். அதே சமயம், ராஜ்சத்யனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 முறை பிரச்சாரம் செய்தார். ஆகவே, எடப்பாடியின் குரலைத்தான் ராஜன் செல்லப்பா மறைமுகமாக ஒலிக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே, விரைவில் அ.தி.மு.க. பொதுக் குழுவை கூட்டி ஓ.பி.எஸ்சுக்கு நெருக்கடி கொடுத்து ஓரங்கட்ட எடப்பாடி முயற்சிப்பதாகவும் பேசப்படுகிறது. அதனால், அடுத்தவாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படலாம் என தெரிகிறது.

You'r reading அதிமுக பொதுக் குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கடி? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை