மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பின்பும், ஆளும் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க. கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. அமித்ஷாவின் பொது கூட்டம் நடந்த போது கூட வன்முறை வெடித்தது.
தேர்தலுக்கு பின் மற்ற மாநிலங்களில் அரசியல் அமைதி ஏற்பட்டு விட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் மட்டும் பதற்றம் ஓய்ந்தபாடில்லை. அங்கு திரிணாமுல் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 54 கவுன்சிலர்கள், பா.ஜ.க.வுக்கு தாவினர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது.
இந்த மோதல் சில இடங்களில் கலவரமாக மாறி வருகிறது. வடக்கு பர்கானா மாவட்டத்தில் சந்தோஷ்காலி பகுதியில் பா.ஜ.க. தொண்டர்கள் அந்த கட்சிக் கொடிகளை ஏற்றினர். அப்போது திரிணாமுல் கட்சியினர் அங்கு வந்து கொடிக்கம்பங்களை பிடுங்கி போட்டனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. திரிணாமுல் கட்சியினர் கூறுகையில், தங்கள் கட்சிக் கொடிகளை அகற்றி விட்டு அந்த இடத்தில் பா.ஜ.க.வினர் கொடிகளை நட்டதால்தான் மோதல் ஏற்பட்டது என்றனர்.
இந்த மோதல் பயங்கர கலவரமாக மாறியதில் இருதரப்பிலும் பலர் காயமடைந்தனர். மேலும் 4 பேர் வரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், ‘‘எங்கள் கட்சியைச் சேர்ந்த சுகந்தா மோன்டல், பிரதீப் மோன்டல், சங்கர் மோன்டல் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.
திரிணாமுல் மாவட்டத் தலைவரும், அமைச்சருமான ஜோதிப்பிரியா மாலிக் கூறுகையில், ‘‘ஹட்காச்சிப் பகுதியில் எங்கள் கட்சியினர் நடத்திய கூட்டத்திற்குள் பா.ஜ.க.வினர் புகுந்து கடுமையாக தாக்கினர். சேர்ந்த கயூம் மோல்லா என்பவரை இழுத்து சென்று கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். அவர்களின் தாக்குதலில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 6 பெண்கள் உள்பட 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்’’ என்றார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டதாகக் கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை பராமரித்து பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, மாநில தலைமைச் செயலாளர் மலாய் குமார் டே, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாநிலத்தில் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், வன்முறையாளர்கள் மீது தயவு தாட்சயண்மின்றி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், நசாத் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த கலவரம் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.