ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவ ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். அம்மாநிலத்தில் கடந்த முறை தெலுங்கு தேசம் கட்சி வென்று, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தார். அப்போது, ஜெகன் கட்சியில் இருந்து 23 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினர்.
தற்போது தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வெறும் 23 எம்.எல்.ஏ.க்கள்தான் கிடைத்துள்ளனர். அதே சமயம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், ஆந்திர சட்டசபை நேற்று கூடியது. முதலமைச்சர் இருக்கையில் ஜெகனும், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்தனர். இதன்பின், புதிய சபாநாயகராக தம்மினேனி சீத்தாராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் ஜெகனும், அமைச்சர்களும் கடந்த கால தெலுங்கு தேசம் சபாநாயகர் கோடல சிவப்பிரசாத ராவை கடுமையாக தாக்கிப் பேசினர். ஜெகன் பேசியதாவது:
ஒரு சபாநாயகர் எப்படி நடந்து கொள்ளக் கூடாதோ, அப்படி சிவப்பிரசாத ராவ் நடந்து கொண்டார். எங்கள் கட்சியில் இருந்து அவர்கள் கட்சிக்கு(தெலுங்குதேசம்) தாவிய 23 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாறாக, அவர்களி்ல் 4 பேருக்கு சந்திரபாபு நாயுடு அமைச்சர் பதவிகளை வழங்கினார். இப்போது ஆண்டவனே அவர்களுக்கு வெறும் 23 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வழங்கி தண்டித்துள்ளான்.
இப்போது அந்த தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சிக்கு வர விரும்புவதாகவும், அப்படி வரும் ஐந்தாறு எம்.எல்.ஏ.க்களை நாம் சேர்த்து கொண்டால் தெலுங்கு தேசம் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து விடும் என்றும் என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் மறுத்து விட்டேன்.
யார் அப்படி கட்சித் தாவினாலும் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சபாநாயகர் அரசியல் சட்டத்தின் மாண்புகளை முறையாக பின்பற்ற வேண்டும். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாராவது ஆளும்கட்சிக்கு வரவிரும்பினால் முதலி்ல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள்.
இவ்வாறு ஜெகன் பேசினார். இதே போல், அவரது அமைச்சர்களும் தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுந்து பேசுகையில், ‘‘முதலமைச்சர் ஜெகனுடைய தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 1978ல் பழைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் இந்திரா காங்கிரஸில் போய் சேர்ந்தார். அந்த காலத்திலேயே உங்கள் தந்தை கட்சி மாறிய வரலாற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்’’ என்று பதிலடி கொடுத்தார்.
இப்படி ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சட்டசபையில் முதல் நாளே காரசார விவாதங்கள் நடைபெற்றன.