நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் துவண்டு போயுள்ள அதிமுகவுக்கு தெம்பூட்ட, தேர்தல்களில் சாணக்கியத்தனமான வியூகம் வகுத்து கட்சிகளுக்கு வெற்றி தேடித் தரும் பிரசாந்த் கிஷோரை துணைக்கு அழைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி, நேற்றே இந்தக் காரியத்தை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் என்ற நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார் பிரசாந்த் கிஷோர். சமீப காலமாக இந்திய அரசியலில் இவரது பெயர் மிகப் பிரபலமாகி விட்டது. ஏனெனில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் கட்சிப் பாகுபாடு இன்றி பல தேர்தல்களில் பல்வேறு கட்சிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி இவர் வகுத்துக் கொடுத்த வியூகம் பெரும் வெற்றியைத் தேடித் தந்ததே இதற்குக் காரணம்.
முதன்முதலில் 2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது பாஜகவுக்காக வியூகம் வகுக்க களத்தில் குதித்தார். மோடிக்காக இவர் செய்த மந்திர, தந்திரங்கள் நன்கு ஒர்க் அவுட்டானது.நாடு முழுமைக்கும் மோடியின் பெயரை உச்சரிக்கும் வகையில், பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த விளம்பர யுக்தியால் மோடிக்கு ஆதரவாக பெரும் ஆதரவு அலை வீசியது. அந்தத் தேர்தலில் வென்று மோடியும் பிரதமராவதற்கு பிரசாந்த் கிஷோர் முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கடுத்து பீகாரில் பாஜக உறவை முறித்து சட்டப் பேரவைத் தேர்தலை தனித்துச் சந்தித்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு வியூகம் வகுத்துக் கொடுத்து மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற வழி ஏற்படுத்தினார். அதன் பின் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்காக ஒப்பந்தமாகி, அம்ரீந்தர் சிங்கை முதல்வராக்கினார். தொடர்ந்து உ.பி.யிலும் காங்கிரசுக்காக இவர் வியூகம் வகுக்க அங்கு மட்டும் பிரசாந்த் கிஷோரின் பாச்சா பலிக்காமல் போய், பாஜக அலையில் காங்கிரஸ் காணாமலே போய் விட்டது.
தற்போது ,கடைசியாக ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் கைகோர்த்த பிரசாந்த் கிஷோர், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றி தேடித் தரவும் காரணமானார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளை காணாமல் போகச் செய்து ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராசி பட்டார். இதனால் பிரசாந்த் கிஷோருக்கும், அவருடைய ஐபேக் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிகளிடையே மீண்டும் படுகிராக்கி ஏற்பட்டுவிட்டது என்றே கூறலாம்.
இதனால், மக்களவைத் தேர்தலின் போது மே.வங்கத்தில் பாஜகவின் அதிரடி களால் ஆட்டம் கண்டுள்ள மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோரை உதவிக்கு நாடியுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள மே.வங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் மம்தா பானர்ஜியும் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இப்போது தமிழகத்திலும், மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து, கட்சிக்குள்ளும் ஏகப்பட்ட குழப்பங்களுடன் துவண்டு போய்க் கிடக்கும் அதிமுகவுக்கு மீண்டும் தெம்பு கிடைக்க பிரசாந்த் சிஷோருடன் கைகோர்த்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு நாள் முன்னதாகவே டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்றிரவே இதற்கான ஏற்பாடுகளை கனகச்சிதமாக பேசி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு 2021-ல் தான் தேர்தல் என்றாலும், இப்போதில் இருந்தே கவனம் செலுத்தினால் தான் அதிமுகவை தலை நிமிரச் செய்யலாம் என்று எடப்பாடி கணக்குப் போடுகிறாராம். ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் மெகா கூட்டணி அமைத்தும் அதிமுகவுக்கு மகா தோல்வி கிடைத்ததற்கு சரியான திட்டமிடலும், முறையான ஒருங்கிணைப்பும், பிரச்சார வியூகத்தில் கோட்டை விட்டதுமே காரணம் என்று எடப்பாடி நினைப்பது தானாம்.
இதனால் பிரசாந்த் கிஷோருடன், எடப்பாடி கைகோர்த்த தகவல் கூட கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் லேட்டாகத் தான் தெரியுமாம். எடப்பாடியின் தந்திரமும் பிரசாந்த் கிஷோரின் பாச்சாவும் தமிழகத்தில் பலிக்குமா? எடுபடுமா? என்பது தேர்தலின் போது தெரியத்தான் போகிறது.