குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத்தில் 2 இடங்கள், ஒடிசாவில் 3 இடங்கள், பீகாரில் ஒரு இடம் என்று 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்தல் ஜூலை 5ம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர், லோக்சபா தேர்தலில் முறையே காந்திநகர், அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், காலியான 2 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்குத்தான் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. எளிதில் ஒரு இடம் வெற்றி பெறும். இன்னொரு இடத்தை வெல்வதற்கு காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த 2 உறுப்பினர்களுக்கான தேர்தலை தனித்தனியாக நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் எம்.பி. தேர்வு செய்யப்படுகிறார். அதாவது, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் முதல் வாக்கு, இரண்டாம் வாக்கு என்று வேட்பாளர்களுக்கு அளிப்பார்கள்.
முதல் வாக்குகளை எண்ணும் போது, ஒருவர் மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்று விட்டால், அவர் வெற்றி பெற்றவராகி விடுவார். ஆனால், அப்படியில்லாத பட்சத்தில் இரண்டாம் வாக்குகள் எண்ணப்பட்டு அதிலுமாக சேர்த்து அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.
தற்போது குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 77 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். எனவே, ஒரே சமயத்தில் 2 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்பட்சத்தில் இரு கட்சிகளும் முதல் வாக்குகளின் அடிப்படையில் தலா ஒரு இடத்தை வென்று விடும். அதாவது, ஒரு எம்.பி.க்கு குறைந்தபட்சம் 62 ‘முதல் வாக்கு’ கிடைக்க வேண்டும்.
ஆனால், தேர்தல் ஆணையம் இரண்டு இடங்களுக்கான தேர்தலையும் தனித்தனியே நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இரண்டு தேர்தலிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கே அதிகமான முதல் வாக்குகள் கிடைக்கும் என்பதால், அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இதையடுத்து, குஜராத் மாநில காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. குஜராத்தில் 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலையும் ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த வழக்கு இன்று கோடைகால நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யகாந்த் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென்று கூறி, ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.