நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார்.
17-வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்து பிரதமர் தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் பதவியேற்றுள்ளது. மக்களவையின் முதல் கூட்டத் தொடரும் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. முதல் இரு நாட்கள் எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் ஏற்றனர்.நேற்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லா பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி, மக்களவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.
இந்நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மத்திய அரசின் பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், குடியரசுத் தலைவரின் உரையில் இடம் பெறுவது வழக்கம்.
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்ச்சி நடைபெறும் என்பதால், அவரின் வருகையே ஒரு கண் கொள்ளாக் காட்சியாக அமைவது வழக்கம். இன்றும் குடியரத் தலைவர் மாளிகையிலிருந்து ஏராளமான குதிரைப்படை வீரர்கள் முன்னும், பின்னும் அணிவகுத்துச் செல்ல, காரில் பவனியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
நாடாளுமன்ற வாயிலில் காத்திருந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்த பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.