தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகளை குளிர்விக்க, இன்று இரவு முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகமே தவியாய் தவிக்கிறது. சென்னையிலோ உச்சக்கட்ட தட்டுப்பாடு நிலவுகிறது.சென்னையைச் சுற்றிலும் உள்ள நீராதாரங்களில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு போய்க் கிடக்கிறது. இதற்குக் காரணம் மழை பொய்த்து விட்டது என்றாலும், கிடைத்த நீரை முறையாக சேமிக்கத் தவறியதும் ஒரு காரணமாகி விட்டது.
தண்ணீர் பிரச்னை ஒரு பக்கம் என்றால், சென்னையில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. மே இறுதியிலேயே விடை பெற வேண்டிய கோடை வெயில் ஜூன் 20-ந் தேதி வரைக்கும் சுட்டெரிக்கிறது.
இந்நிலையில், சென்னை வாசிகளுக்கு இந்த இரு கொடுமைகளிலிருந்தும் இன்று மாலை முதல் தற்காலிக தீர்வு கிடைக்கப் போகிறது என்ற ஆறுதலான தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் வானிலை நிபுணரான பிரதீப் ஜான் சென்னை வானிலை குறித்து கூறுகையில், இன்று மாலை அல்லது இரவு முதல் வரும் 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.
சென்னை முழுவதும் ஒரே நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும், ஆங்காங்கே விட்டு விட்டு மழை இருக்கும். வெயிலின் தாக்கமும் இன்று முதலே குறைய ஆரம்பித்து, அதிகப்படியான காற்றும் வீசும் என்று தெரிவித்து, சென்னைவாசிகளுக்கு ஆறுதலான தகவலை கூறியுள்ளார்.