அரசு வீட்டை காலி செய்த சுஷ்மா முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்

Sushma Swaraj vacates govt house: You have set an example, says Twitter

by எஸ். எம். கணபதி, Jun 29, 2019, 13:29 PM IST

டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலி செய்திருக்கிறார். இதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதும், ‘நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்’ என்று அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், டெல்லி முதல்வராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் ஒருவராகவும் பதவி வகித்தவர். பிரதமர் மோடி அமைச்சரவையி்ல் வெளியுறவுத் துறை அமைச்சராக இடம்பெற்றிருந்தார். அவரது செயல்பாடுகளால், மோடியையும் விஞ்சும் அளவுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டில் சிறுநீரகப் பிரச்னை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த சுஷ்மா சுவராஜ், சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்தார். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் திடீரென அறிவித்தார். அவருக்கு பா.ஜ.க. மேலிடம் சீட் தர விரும்பவில்லை என்பதை மூத்த நிர்வாகிகள் மூலம் அறிந்த பின்பே அப்படி அவர் அறிவித்ததாக கூறப்பட்டது.

இதன்பின், மோடி அரசு 2ம் முறையாக பதவியேற்ற பின்பு, சுஷ்மாவுக்கு வேறொரு பதவி தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மாதத்தில் ஒரு நாள் திடீரென ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், ட்விட்டரில் சுஷ்மாவுக்கு வாழ்த்தே போட்டு விட்டார். ஆனால், அதற்கு பிறகு சுஷ்மாவே ஒரு ட்விட் போட்டார்.

அதில், தான் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும், அதை வைத்தே ட்விட்டரில் அப்படி செய்திகள் வெளியாகி விட்டதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இனிமேல் மோடி-அமித்ஷா ஜோடி தன்னை கண்டுகொள்ளாது என்பதை உணர்ந்த சுஷ்மா சுவராஜ், டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்தார். பின்னர் அவர் ட்விட்டரில், ‘‘எனக்கு ஒதுக்கப்பட்ட 8, சப்தர்ஜங் லேண் அரசு இல்லத்தில் இருந்து நான் வெளியேறி விட்டேன். இந்த முகவரியில் மற்றும் பழைய தொலைபேசிகளில் என்னை இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்,

இதையடுத்து, ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், பாராட்டு தெரிவித்தும் கமென்ட்ஸ் போட்டிருக்கிறார்கள். அதில், ‘‘அரசு இல்லத்தை காலி செய்து நீங்கள் நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்’’ என்று பாராட்டியுள்ளனர். ஒருவர், ‘உங்கள் உடல்நலம் காரணமாகவே இப்போதைய அரசில் இல்லை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வாஜ்பாய், அடல்ஜிக்கு நெருக்கமானவரான நீங்கள் இம்முறை பதவியில் இல்லாததற்கு வேறொரு காரணம் இருக்கக் கூடாது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, ‘‘நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமா..? கழிவுநீர் கால்வாயில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

You'r reading அரசு வீட்டை காலி செய்த சுஷ்மா முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை