டாஸ்மாக் கடைகளில் அரசே விற்கும் சரக்கு, உணவுப் பொருளா? போதைப் பொருளா? என்று நீதிபதியிடம் கேள்வி கேட்டதற்காக, வழக்கறிஞர் நந்தினியும் அவருடைய தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 5-ந் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரை சிறையில் அடைத்ததற்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளதுடன், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் நந்தினி. இவருடைய தந்தை ஆனந்தன் அரசுத்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மதுரை சட்டக் கல்லூரியில் மாணவியாக இருந்தபோதே மதுவின் கொடுமைக்கு எதிராக போராட்டக் களத்தில் குதிக்க ஆரம்பித்தார். தன்னந்தனியாக, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக இவருடைய போராட்டம் தொடர்கிறது .இவருடைய போராட்ட ஆயுதமே எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய ஒரு சார்ட் பேப்பர் மட்டும் தான். துணைக்கு இவருடைய தந்தையை அழைத்துக் கொண்டு போராட்டங்களில் அமர்வதும், சிறைக்குச் செல்வதும் என்பது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட முறை சிறைக்கும் சென்று விட்டார்.
டாஸ்மாக்குக்கு எதிராக மட்டுமின்றி, மணல் கொள்ளை, நீட் தேர்வு விவகாரம், ஸ்டெர்லைட் பிரச்னை, பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் என தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுக்கு எல்லாம் கலெக்டர் அலுவலகம் முதல் கோட்டை வரை இவருடைய போராட்டம் தொடர்கிறது என்றே கூறலாம்.
இதனால் படிக்கும் போது சட்டக்கல்லூரி மாணவி நந்தினி என்றழைக்கப்பட்ட இவர் இப்போது வழக்கறிஞர் நந்தினி ஆகிவிட்டார்.
நந்தினிக்கு வரும் 5-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அழைப்பிதழும் கொடுத்தாகி விட்டது.இந்நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நந்தினி கைது செய்யப்பட்டதும் ஒரு விநோதமான காரணத்திற்காகத் தான். என்ன காரணம் என்றால் டாஸ்மாக் சரக்கு உணவுப் பொருளா? போதைப் பொருளா? போதைப் பொருளை அரசே விற்றால் குற்றமாகாதா? என நீதிபதியிடம் கேட்டதால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டக் கல்லூரியில் படிக்கும் போது,5 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி மற்றும் அவருடைய தந்தை ஆனந்தன் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இருவரும் ஆஜராகினர். வழக்கில் விசாரணையின் போது வாதாடிய நந்தினி, இந்த தண்டனைச் சட்டம்பிரிவு 328 -ன் படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்கப்படுவது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? டாஸ்மாக் சரக்கு உணவுப் பொருளா? அல்லது போதைப் பொருளா? என்று கேள்வி எழுப்பினார்.
இது போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பக் கூடாது என்று கண்டித்த நீதிபதி, இனிமேல் இது போன்ற கேள்விகளை எழுப்பமாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.. ஆனால், நந்தினியும், அவருடைய தந்தையும் எழுதிக் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நந்தினிக்கு வருகிற 5-ந்தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவரை ஜூலை 9-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.நீதிமன்றத்தை பலரும் தரக்குறைவாக விமர்சித்துவரும் நிலையில் அவர்கள் மீதெல்லாம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? தற்போது நந்தினி கேள்வி கேட்டதற்காக கைது செய்தது நியாயமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், நந்தினியை விடுதலை செய்ய வேண்டும் என்று #ReleaseNandhini என்ற ஹேஷ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.