முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியடைந்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஜெகன் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், ஜெகன் பதவியேற்றதுமே, சந்திரபாபு நாயுடு குடியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யக் கூறி, அரசு நோட்டீஸ் அனுப்பியது. பங்களாவை ஒட்டி கட்டப்பட்டிருந்த முகாம் அலுவலகக் கட்டடத்தை விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி, அரசு இடித்து தள்ளியது. சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டடம் இடிக்கப்படும் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. நாயுடு மகனுக்கு அளிக்கப்பட்ட இசட் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது. நாயுடுவுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு இசட் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, ஒரு ஏஎஸ்பி, ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 3 ஷிப்ட்களில் 2 கான்ஸ்டபிள் வீதம் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக கூறியிருக்கிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், பாதுகாப்பை குறைத்தது தவறு என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாயுடுவின் சார்பில் வக்கீல் சுப்பாராவ் ஆஜராகி, ‘‘சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல 2003ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி திருப்பதி அலிபிரியில் கண்ணி வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடிகளில் இருந்து அவர் உயிர் தப்பினார். கடந்த 5 ஆண்டுகளில் திருப்பதி மலைகளில் இருந்து செம்மரங்களை கடத்தி்ச் செல்வோர் மீது சந்திரபாபு நாயுடு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எனவே, கடத்தல்காரர்களிடம் இருந்தும் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்நிலையில், அவருக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை குறைத்தது சட்டவிரோதமானது. அவர் கடந்த 2014க்கு முன்பும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட அதே பாதுகாப்பை இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நிலையில் அவருக்கு அளித்தாலே போதுமானது’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்ட ஆந்திர உயர்நீதிமன்றம் வழக்கை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.