உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முக்கியப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிதிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுமே முட்டி மோதும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.
இந்த உலகக்கோப்பை தொடரில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி,அரையிறுதிக்கு முன்னேற சிக்கல் மேல் சிக்கலாகி பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டு 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தாலும், பின்னாடியே பாகிஸ்தான் துரத்துகிறது. அதனால் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து 3-வது இடத்தைப் பிடித்து விடும். தோற்கும் பட்சத்தில், அடுத்து பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான போட்டி முடிவுக்காக இங்கிலாந்து காத்திருக்க வேண்டும். அந்தப் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்ற முக்கோணச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது இங்கிலாந்து .
இதனால் இன்று நியூசிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து கடுமையாக போராடும் என்பது நிச்சயம். அதே வேளையில் இந்தத் தொடரில் அபார ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதும் நிச்சயமாகத் தெரிகிறது. இதனால் இன்றைய போட்டியில் சூடு பறக்கப் போவது நிச்சயம்.