ஜனநாயகத்தின் அடிப்படையே பலவீனமாகி விட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Rahul Gandhi rules out rethink, sets stage for change in congress

by எஸ். எம். கணபதி, Jul 4, 2019, 09:56 AM IST

தேர்தலில் பா.ஜ.க.வை மட்டும் எதிர்த்து போராடவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணிவகுத்து வந்த ஒவ்வொரு அரசியலமைப்பையும் எதிர்த்தும் போராடினோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.

அதன்பிறகு, தேர்தலின் போது மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்பட பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், யாருமே சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். அதே போல், பா.ஜ.க.வை எதிர்த்து தான் தனி ஆளாக நின்று போராட வேண்டியதாயிற்று என்றும் குறிப்பிட்டார். தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.

இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் உள்பட பலரும் ராகுலிடம் முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தினர். தொடர்ந்து, காங்கிரஸ் முதலமைச்சர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகியோர் கடந்த 2ம் தேதியன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பதவி விலகல் முடிவை கைவிட்டு, தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால், ராகுல்காந்தி அசைந்து கொடுக்கவே இல்லை.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘நான் காங்கிரஸ் செயற்குழுவில் எனது ராஜினாமாவை கூறி, கடிதம் அளித்து விட்டேன். செயற்குழு விரைவில் கூடி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பணியில் நான் எந்தவிதத்திலும் ஈடுபட மாட்டேன்’’ என்று கூறினார்.

இதன்பின், ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள 4 பக்க கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியை மீண்டும் வலுப்படுத்த கடுமையான முடிவு எடுக்க வேண்டும். புதிய தலைவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது. புதிய தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்.
பதவி, அதிகாரத்துக்காக நான் எப்போதும் ஆசைபட்டதில்லை.

அதே போல், பா.ஜ.க. மீது எனக்கு வெறுப்போ, கோபமோ கிடையாது. நமது நாட்டின் மீதான அந்தக் கட்சியின் கொள்கைகளைத்தான் நான் எதிர்க்கிறேன். பல்வேறு தரப்பு மக்களிடமும் சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் வகையிலேயே நமது பிரசாரம் அமைந்து இருந்தது. பிரதமர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக போராடினேன். இந்த தேசத்தின் மீது வைத்துள்ள அன்பால், நாட்டின் பாரம்பரிய கொள்கைகளை பாதுகாப்பதற்காக போராடினேன்.

நாம் ஒரு அரசியல் கட்சியை மட்டும் எதிர்த்து போராடவில்லை. நாட்டின் அத்தனை அமைப்புகளையும் எதிர்த்தும் போராடினோம். காரணம், ஒவ்வொரு அமைப்பும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணி வகுத்து அனுப்பப்பட்டன. எப்போதுமே தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒளிவுமறைவின்றி, நடுநிலையோடு இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படையே பலவீனமாகி விட்டது.

பிரதமர் வெற்றி பெற்றதால் அவர் மீதான ஊழல் புகார்கள் எல்லாம் மறைந்து விடவில்லை. பணத்தாலும், பிரசாரத்தாலும் உண்மையின் ஒளியை மறைத்து விட முடியாது.
நமது அரசமைப்பு நிறுவனங்களை மீட்டெடுக்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதற்கு காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மேலும், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘காங்கிரஸ் தலைவர்’ என்பதை நீக்கி விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் எ்னறு மட்டும் போட்டிருக்கிறார். 

கையெழுத்திட மறுக்கும் ராகுல்; காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

You'r reading ஜனநாயகத்தின் அடிப்படையே பலவீனமாகி விட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை