நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 222 முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 27 ஆயிரம் கோடி வரை சுருட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு, 2018-19ம் ஆண்டில் நடந்த பொருளாதார குற்றங்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் வங்கி குற்றங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018-19ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 222 பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளால் சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வங்கிகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் அதிகரிப்பதால், பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றும் கம்பெனிகளில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டுகளை நடத்தியது. இதில் 16 கம்பெனிகளில் வங்கி மோசடிகள் குறித்த விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கம்பெனிகள் மட்டுமே ரூ.1139 கோடிகளை சுருட்டியுள்ளன. இது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஸ்டேட் வங்கி, பஞ்சாப்நேஷனல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, யுனைடெட் கமர்சியல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில்தான் அதிகமான கடன் மோசடிகள் நடைபெற்றுள்ளன. குஜராத்தில் ஒரு வைர வியாபாரி, வங்கிகளில் மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளார். விஜய்மல்லையா, நிரவ்மோடி, முகுல்சோக்ஷி போல் பெரிய கடன்காரர்களை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று மத்திய அரசு கவனமாக உள்ளது’’ என்றார்.