உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியாக குவித்த நியூசிலாந்து அணி, கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியுற்று, அரையறுதிக்கே திண்டாட வேண்டியதாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இங்கிலாந்தை எளிதாக அரையிறுதிக்கு அனுப்பி வைத்த நியூசிலாந்து, தனது அரையிறுதி வாய்ப்புக்காக 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுகள் முடிவடையும் தருவாயில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. போட்டிகள் தொடங்கும் முன்னரே அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தான் முன்னேறும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கணித்திருந்தனர். ஆனால் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து அணி, இலங்கை அணியிடம் கண்ட தோல்வியால் இத்தொடரில் ஏகப்பட்ட திருப்பங்களுக்கு வழி ஏற்படுத்திவிட்டது.இங்கிலாந்தின் இந்த ஒரு தோல்வியால் பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக, அடுத்தடுத்த போட்டிகளில் யார் யாரை வெல்ல வேண்டும், அல்லது யார் யாரிடம் தோற்க வேண்டும் என ஏகப்பட்ட கூட்டல், கழித்தல் கணக்குகளுக்கு வழி ஏற்படுத்திவிட்டது.
இந்த கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கு நேற்று நடந்த இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் கிட்டத்தட்ட முடிவு கிடைத்துவிட்டது எனலாம். ஆனாலும் இப்போது நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு என்பது மட்டும் உறுதியாக இன்னும் 2 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு என்ற இக்கட்டான நிலையில் முதலில் ஆடிய இங்கிலாந்து, கெத்தாக 8 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை குவித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் (60) மற்றும் பேர்ஸ் டோவ் (106) அதிரடியால் இந்த இலக்கை இங்கிலாந்து எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்தோ, 45 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி லாதம் (57) மட்டுமே அரைசதம் அடிக்க, 7 பேர் ஒற்றை இலக்கத்தை தாண்டாமல் அவுட்டாகினர். இதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, இங்கிலாந்தை அரையிறுதிக்கு அனுப்பி வைத்தது நியூசிலாந்து.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வெல்ல முடியாத அணி என கெத்து காட்டிய நியூசிலாந்து, கடைசியாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளிலும் பரிதாபமாக தோற்று, அரையிறுதி வாய்ப்பே கேள்விக்குறியாகும் சோகமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போதும் நியூ சிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதிதான் என்றாலும், நாளை பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டி முடிவடைந்த பின் தான் இறுதியாகத் தெரிய வரும்.அதுவரை நியூசிலாந்து காத்திருக்க வேண்டும்.