திமுகவில் 3வது வேட்பாளர் வைகோ அளித்த விளக்கம்

Why dmk advocate Elango filed nomination as 3rd candidate in rajyasabha election? : vaiko explained

by எஸ். எம். கணபதி, Jul 8, 2019, 13:43 PM IST

ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் 3வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்தது ஏன் என்பதற்கு வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
திமுக சார்பில் தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும், மற்றொரு இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடம், ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இந்த 3 பேரும் மனுதாக்கலுக்கு இறுதி நாளான இன்று வேட்பு மனு செய்கின்றனர்.

இந்நிலையில், தி.மு.க.வின் சார்பில் 3வது வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார். நாளை மனுக்கள் பரிசீலனையின் போது, வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் தி.மு.க. சார்பில் என்.ஆர். இளங்கோ போட்டியிடுவார். அல்லது போட்டியில் இருந்து விலகி விடுவார் என்று காரணம் கூறப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்களிடையே குழப்பம் ஏற்படுத்த தி.மு.க. சார்பில் 3வது வேட்பாளரை நிறுத்தி ஆழம் பார்க்கிறார்களோ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது மதிமுக தொண்டர்களின் விருப்பம். நான் எம்.பி.யாக வேண்டுமென மு.க. ஸ்டாலின் விரும்பினார். நான் போட்டியிடுவதென்றால் மட்டுமே ஒரு சீட் தருவதாகக் கூறி, அப்படியே தந்தார்.

ஒருவர் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதிநீக்கம் செய்யப்படுவார். ஓராண்டு மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டதால், எனது வேட்பு மனுவை ஏற்று கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று நம்புகிறேன். இருந்தாலும் நானே மாற்று வேட்பாளரை நிறுத்துமாறு ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டேன்.

அதன்படி, என்.ஆர்.இளங்ேகா மனு தாக்கல் செய்துள்ளார். எனது மனுவை ஏற்று கொண்டு விட்டால் என்.ஆர். இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்று விடுவார்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தல்; 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்

You'r reading திமுகவில் 3வது வேட்பாளர் வைகோ அளித்த விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை