மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் இறப்பில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே தெரிவித்திருக்கிறார்.
மக்களவையில் உறுப்பினர்கள் அசாதீன் ஓவைசி, சையத் இம்தியாஸ் ஜலீல் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறியதாவது:
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், செப்டிக் டேங்க், பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி வேலை பார்ப்பது நிறுத்தப்படவில்லை. இப்படி பணியாற்றியவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டில் இருந்து இது வரை 620 பேர் உயிரிழந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களில் 88 பேர் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இறந்திருக்கிறார்கள். இவை அரசுக்கு தெரிவிக்கப்பட்ட இறப்புகள் மட்டும்தான். தற்போது உயிரிழந்த 445 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்பட்டுள்ளது. மேலும் 58 பேரின் குடும்பங்களுக்கு பகுதி இழப்பீடு தரப்பட்டுள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்த துப்புரவு தொழிலாளிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேர், அடுத்து கர்நாடகா 75, உத்தரபிரதேசம் 71, ஹரியானா 51, ராஜஸ்தான் 33, பஞ்சாப் 30, டெல்லி 28, மேற்குவங்கம் 18, கேரளா 12 பேர் என்று உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் ஓரிரு துப்புரவுத் தொழிலாளிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோரை தண்டிக்க சட்டத்தில் இடமிருந்தாலும் இது வரை யாரையும் தண்டித்ததாக மாநிலங்களில் இருந்து தகவல் இல்லை.
இவ்வாறு அமைச்சர் அதவாலே தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, பணியில் உள்ள போது மரணமடைந்த துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.