‘மனிதக் கழிவுகளை அகற்றும் இழிவில் 1993 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்த விஷயத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு’’ என்று தமிழக அரசை ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நேற்று கேள்வி நேரத்தில் ஒரு தகவலைக் கூறினார்.
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், 1993ம் ஆண்டில் இருந்து இது வரை 620 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த உயிரிழப்புகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது என்று இம்மாநிலத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேர், அடுத்து கர்நாடகா 75, உத்தரபிரதேசம் 71, ஹரியானா 51, ராஜஸ்தான் 33, பஞ்சாப் 30, டெல்லி 28, மேற்குவங்கம் 18, கேரளா 12 பேர் என்று உயிரிழந்துள்ளனர் என்றும் அதவாலே கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்து கமென்ட் போட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பது :
தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144.
இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு!
மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?
உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.