தங்களது ராஜினாமாவை ஏற்காமல், திட்டமிட்டே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார் என்றும், சபாநாயகர் தமது ஜனநாயக கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் கூறி, அவருக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது. கடந்த வாரம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேரும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 14 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். பின்னர் இவர்கள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகளை எல்லாம் பாஜக தான் செய்ததாக காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் குழப்பம் நீடிக்கிறது. இதனால் குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா பற்றி சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமாரும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், சில விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்படும். அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு காலவரம்பு எதுவும் இல்லை எனவும் கூறி விட்டார்..
இதனிடையே சபாநாயகரை காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் சித்தராமையா சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, அரசின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பது பாஜகவின் வழக்கமாகி விட்டது. மக்கள் எங்களுக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர்.
இந்த முறை தேசிய அளவிலான தலைவர்களான அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரும் கர்நாடக அரசியல் விவகாரத்தில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களது உத்தரவுப்படியே அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.இது ஜனநாயகம் மற்றும் மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. அவர்கள் பணம், பதவி, மந்திரி அந்தஸ்து ஆகியவற்றை தருகிறோம் என கூறுகின்றனர்.
பாஜகவுடன் கைகோர்த்து உள்ள அதிருப்தியாளர்கள் உடனே திரும்பி வரவேண்டும். ராஜினாமாவையும் திரும்ப பெற வேண்டும்.
இல்லையெனில் இந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் மனு ஒன்றை நாங்கள் அளிக்க உள்ளோம். ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இதுதவிர்த்து, அடுத்து 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளோம் என்று சித்தராமய்யா கூறியிருந்தார்.
.இந்நிலையில், ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அரசியலமைப்பு கடமையை சபாநாயகர் கைவிட்டு விட்டார். தங்களது ராஜினாமாவை ஏற்பதில் வெளிப்படையாகவே அவர் காலதாமதம் செய்து வருகிறார் என தங்களது மனுவில் அவர்கள் குற்றச்சாட்டாக குறிப்பிட்டு உள்ளனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.