கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது.
முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். அதன்பின், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருக்கு தொடர்ந்து நெருக்கடி தரப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 2 பேர், 2 சுயேச்சைகள் என்று 13 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை பெற்ற சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் எந்த முடிவும் எடுக்கவில்லை. இவர்களின் ராஜினாமாக்களை ஏற்று விட்டால், ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்து விடும். பின்னர், எடியூரப்பா தலைமையி்ல் பாஜக ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்த்தனர்.
இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வர முயன்ற அமைச்சர் சிவக்குமார், மகாராஷ்டிர போலீசாரால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், தங்கள் ராஜினாமா கடிதங்களில் விரைவில் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 10 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, 10 எம்.எல்.ஏ.க்களையும் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில் ஆஜராக உத்தரவிட்டனர். சபாநாயகர் அந்த 10 பேரிடமும் அவர்களின் ராஜினாமாவில் உறுதியாக இருக்கிறார்களா என்று தெரிந்து முடிவெடுக்க வேண்டும். அதை நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் மும்பையி்ல் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டனர். இதற்கிடையே, சபாநாயகர் ரமேஷ்குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘10 எம்எல்ஏக்களின் ராஜினாமா விஷயத்தில் அவர்கள் யாருடைய வற்புறுத்தலின் பேரி்லும் இதை செய்கிறார்களா என்று விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, என்னால் உடனடியாக முடிவெடுக்க முடியாது. மேலும், நான் முடிவெடுப்பதற்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியுமா?’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்து, நாளை விசாரிப்பதாக கூறியுள்ளது.
இதனால், சபாநாயகர் ரமேஷ்குமார் முன்பாக 10 எம்எல்ஏக்கள் இன்று மாலை ஆஜராவார்களா, அவர்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு எடுப்பாரா என்பது சந்தேகம். இந்த சூழலில், கர்நாடக அரசியல் மேலும் இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருக்கிறது.