கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்.- மஜத கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் கடந்த வாரம் அடுத்தடுத்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர். ஆனால் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதையடுத்து 10 எம்எல்ஏக்கள், சபாநாயகர் ரமேஷ்குமார் கடமை தவறி விட்டார் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 10 எம்எல்ஏக்களும் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி கடிதம் கொடுக்க வேண்டும். அதனைசபாநாயகர் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை 10 எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
ஆனால், ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டி உள்ளது. எம்எல்ஏக்கள் சுய விருப்பப்படி தான் ராஜினாமா செய்தார்களா? அல்லது யாருடைய நெருக்கடியின் பேரிலா வது ராஜினாமா செய்தார்களா? என்றெல்லாம் அலசி ஆராய வேண்டியது தமது கடமை. அதனால் அவசரமாக முடிவெடுக்க முடியாது. எனவே இதற்கு கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டார்.
இதனால் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் தரப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் மிக்க சபாநாயகர் ரமேஷ்குமார், அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர். கட்சித் தாவல் நடவடிக்கைக்கு பயந்தே எம்எல்ஏக்கள் ராஜினாமா நாடகமாடுகின்றனர்.
இதனால் சபாநாயகர் முடிவு எடுக்க அவகாசம் தேவை என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார். ஆனால் எம்எல்ஏக்கள் தரப்பில் வாதிட்ட முகுல்ரோத்தகி, சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகர் திட்டமிட்டுள்ளார் என்று முகுல்ரோத்தகி முறையிட்டார். இதையடுத்து கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சபாநாயகரின் நடவடிக்கையை நீதிமன்றம் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கிறாரா? என்று கோபமாகக் கேட்டார்.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக காரசார வாதம் நடைபெற்றது.இதன் பிறகு இந்த வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதிகள், அதுவரை எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் கர்நாடக அரசியல் பரபரப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது.