சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளம் அரசு உச்சக்கட்ட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவுத்துள்ளனர். மேலும் இரு சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவை வாபஸ் பெற்று பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துவிட்டனர்.
இதனால் குமாரசாமி அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இரு கட்சித் தலைவர்களும் ஈடுபட்டனர். ஆனால் அதிருப்தியாளர்கள் மசியவில்லை. இதனால் அரசுக்கு நெருக்கடி முற்றிவிட, பாஜகவோ, குமாரசாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்குவதாக இருந்த சட்டப்பேரவை 12.30 மணிக்குத் தான் கூடியது .இந்தக் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் பங்கேற்கவில்லை.
கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் பேசிய முதல்வர் குமாரசாமி, தமது அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் தமது ஆசையில்லை. தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலையில், நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக உள்ளேன். இந்தக் கூட்டத்தொடரிலேயே, நம்பிக்கை தீர்மானத்திற்கான நாள் எப்போது என்பதை குறியுங்கள் என்று குமாரசாமி வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடக அரசியலில் தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி, குமாரசாமி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு பாஜக தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் முந்திக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.