பஞ்சாப் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய சித்து, அம்மாநில முதலமைச்சருக்கு இன்று முறைப்படி ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறுவார் எனத் தெரிகிறது.
பஞ்சாப்பில் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஏற்கனவே பாஜகவில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து, பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் தீவிரப் பிரசாரம் செய்ததுடன், தானும் வெற்றி பெற்று அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.
சித்துவுக்கு உள்ளாட்சி துறை மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது இந்நிலையில், அவருக்கும், முதலமைச்சர் அமரீந்தர்சிங்குக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக பதவியேற்ற போது, அந்த விழாவில் சித்து கலந்து கொண்டார். அப்போது அந்நாட்டு ராணுவ தளபதி கோமர் பஜ்வாவை ஆரத்தழுவி வாழ்த்தினார். இது அமரீந்தர்சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமைக்கும் நெருக்கடியைக் கொடுத்தது. அதே போல், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு உரசல் இருந்த சமயத்தில், கர்தாப்பூர் விழாவுக்கு சென்றார்.
இதனால், அவருக்கும், அமரீந்தர்சிங்குக்கும் மோதல் அதிகரித்தது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மின்சார துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆனால், அவர் அந்த துறை அமைச்சர் பதவியை ஏற்கவே இல்லை. ஒரு மாதத்திற்கு மேலாக அவர் அலுவலகத்திற்கு வராதததை அடுத்து, அவரது பதவியை பறிக்குமாறு கவர்னரிடம் பாஜக மனு கொடுத்தது.
இதற்கிடையே, கடந்த ஜூன் 10ம் தேதியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காகாந்தி ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தின் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் சித்து நேற்று(ஜூலை 14) வெளியிட்டு, தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக கூறினார். இது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பேசி, சமாதானப்படுத்தினார்.
இந்நிலையில், சித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘முதலமைச்சர் அலுவலகத்திற்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டேன்’’ என்று கூறியிருக்கிறார். எனவே, அவர் காங்கிரஸ் தலைவர்களின் சமரசத்தை ஏற்கவில்லை என்று தெரிகிறது. பஞ்சால் மாநில முதலமைச்சரை எதிர்த்து சித்து இனிமேல் பேசக் கூடும் என்பதால், அவர் காங்கிரசிலும் நீடிப்பது சந்தேகம் எனத் தெரிகிறது.