சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அட்வைஸ் செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பி்ன்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘‘வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்களே?’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அழகிரி, ‘‘ரஜினி ரசிகர்கள் வேலூருக்கு போய், அங்குள்ள திரையரங்குகளில் ரஜினி படத்தைப் பார்த்து விட்டு வரட்டும். அதை விட்டு விட்டு, யாருக்காவது பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அதனால் எதுவும் ஆகப் போவதில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆருக்குப் பிறகு எந்த நடிகராலும் அரசியலில் ஜொலித்து விட முடியவில்லை. அதனால், அரசியல் என்ற வீண் முயற்சியில் இறங்காமல் இருப்பதே ரஜினிக்கு நல்லது என்று அவரது ரசிகர் என்ற அடிப்படையில் கூறுகிறேன்’’ என்றார்.
வேலூரில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். ரஜினி, புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த சமயத்தில், அவருக்காகவே தனது கல்லூரியில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து கொடுத்தவர் ஏ.சி.சண்முகம். அந்த விழாவில் எம்.ஜி.ஆர். காலத்து பழைய அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றனர். எனவே, ரஜினி கட்சி தொடங்கினால், இவர்கள் எல்லாம் அதில் இடம்பெறுவார்கள் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், இப்போது அதிமுக கூட்டணியில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். ஆனாலும், அவருக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.