தபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது

After TN MPs stalls Rajya sabha proceedings, Central govt cancelled the Postal exam conducted by English and Hindi :

by Nagaraj, Jul 16, 2019, 15:38 PM IST

தபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.‍ இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இது வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழகத்தில் பங்கேற்போர் தமிழ் மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்வில் தமிழ் மொழியில் எழுத முடியாது, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ் மொழியை புறக்கணித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்வை நடத்தலாம்... ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இன்று காலை ராஜ்யசபா கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.மேலும் தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடுவின் இருக்கையை முற்றுகையிட்டும் தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடிய போதும் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், ராஜ்யசபா 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா கூடிய போது, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தி, ஆங்கிலம் மொழியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும். தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். இதன் பிறகே ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் அமைதியாகினர்.

'சரக்கு' பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக காந்தி படம்..! மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்

You'r reading தபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை