ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி அரசு கொள்கை முடிவெடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

make a policy decision on hydro carbon, stalin told edappadi government

by எஸ். எம். கணபதி, Jul 16, 2019, 15:49 PM IST

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைப் பற்றி, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தமிழகத்தின் உறுப்பினர்கள் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கின்றார்கள். அதற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘தமிழகத்தில் மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

7 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டிற்கு மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் மைனிங் லைசென்ஸ் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று கூறியிருக்கின்றார்.

ஏற்கனவே இதே அவையில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்பொழுது பதிலளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர், ‘‘தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு உறுதியாக அனுமதி அளிக்காது விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று இந்த பேசி அது பதிவாகியிருக்கின்றது. அதுமட்டுமல்ல, திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இதனைப் பற்றி பேசியுள்ளார்.

அப்பொழுது பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர், ‘‘தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியே கிடையாது. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை. இதுதான் உண்மை’’ என்று உறுதியாக பதில் தந்திருக்கிறார். எனவே, நான் கேட்க விரும்புவது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்பதை தமிழக அரசு ஒரு கொள்கை முடிவாக எடுத்து இந்த அரசு அறிவிக்க வேண்டும் அறிவிப்பது மட்டுமல்ல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தால்தான் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு அடைய முடியும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்ற ஒரே கொள்கை முடிவினை இந்த அரசு எடுக்க வேண்டும். அதுவும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்திட வேண்டும்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தந்திருக்கக்கூடிய பதிலின் அடிப்படையில்தான், நான் மீண்டும் - மீண்டும் கேட்கின்றேன். டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஒரு நிம்மதி வரவேண்டும் என்று சொன்னால் உடனடியாக ஒரு கொள்கை முடிவு எடுத்து அதை நீங்கள் அறிவித்து, இந்த அவையில், இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம்; 'கண்ணாமூச்சி' ஆடும் மத்திய, மாநில அரசுகள்

You'r reading ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி அரசு கொள்கை முடிவெடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை