தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் கண்ணாமூச்சி ஆடும் மத்திய, மாநில அரசுகள்

Centre and state govts plays different roles in Hydro carbon project in Tamilnadu

by Nagaraj, Jul 3, 2019, 13:31 PM IST

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், ஒரு காலத்தில் முப்போகம் விளையும் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்தது. காவிரியில் உரிய நீர் கிடைக்காததால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு போக விளைச்சலுக்கே திண்டாட வேண்டிய பரிதாபத்துக்கு அப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓரளவுக்கு கிணற்று நீர் பாசனத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டி வரும் அந்த விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல், மீத்தேன் , ஈத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் என்ற ௹பத்தில் தினம் தினம் வெளியாகும் செய்திகளால் பதறிப் போய் உள்ளனர் விவசாயிகள் . மக்களுக்கு சோறு போடும் விவசாய நிலங்களை அழித்து, பூமிக்கடியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையாக புதையுண்டு கிடக்கும் வளங்களைச் சுரண்ட பன்னாட்டு நிறுவஙை்கள் செய்யும் சதிதான் இது. இதற்கு ஆளும் அரசாங்கங்களும் பக்க பலமாக இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

இந்தச் சதியை தாமதமாகப் புரிந்து கொண்ட விவசாயிகள், இது போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு காட்டி கடந்த 5 ஆண்டுகளாக நடத்தாத போராட்டங்கள் இல்லை. கதிராமங்கலம், நெடு வாசல் போன்ற இடங்களில் காலவரையற்ற போராட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் அமர்ந்தவுடன் தான் ஒட்டு மொத்த தமிழகமும் இந்தத் திட்டங்களின் விபரீதத்தை உணர்ந்தது எனலாம். அரசியல்வாதிகள், திரையுலகினர், பொது வாழ்வில் உள்ளோர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராட்டக் களத்தில் குதித்து எதிர்ப்பைக் காட்டினர்.

இதனால் இந்தத் திட்டங்களில் இருந்து பின்வாங்குவது போல் நடிப்புக் காட்டி சிறிது காலம் அமைதி காத்தன கார்ப்ரேட் நிறுவனங்களும், மத்திய மாநில அரசுகள். இப்போது மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி ... சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி...கடலூர் முதல் ராமநாதபுரம் வரை டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஏராளமான கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி கிடைத்துவிட்டது என்ற செய்திகள் 2 மாதங்களுக்கு முன்னரே விலாவாரியான ஆதாரங்களுடன் வெளியாகின. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தினமும் எதிர்ப்பு போராட்டங்களை பல ரூபங்களில் மக்கள் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதையெல்லாம் சட்டை செய்யாத மத்திய அரசோ, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கூடுதலாக நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அனுமதி அளித்துள்ளதாகவும் முதற்கட்டமாக 20 இடங்களில் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி டெல்டா விவசாயிகளிடம் மீண்டும் பீதியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்ற பிரச்னையை எழுப்பி, சட்டசபையில் திமுக சார்பில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு மு.க.ஸ்டாலின் தமது எதிர்ப்பை பதிவு செய்தார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமோ,
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கையைப் பாதிக்கும் வகையிலான எந்த திட்டத்திற்கும், எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது. மத்திய அரசு அனுமதித்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் அ.தி.மு.க. அரசுதான் ரத்து செய்தது என்று
தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடும், மாநில அரசின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருப்பது போலத் தெரிந்தாலும், இரு அரசுகளுமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாகவே தெரிகிறது. இதனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி

You'r reading தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் கண்ணாமூச்சி ஆடும் மத்திய, மாநில அரசுகள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை