போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று இலங்கை அதிபர் சிறிசேனா எடுத்துள்ள முடிவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே மோதல் போக்கு இன்னும் மாறவில்லை. ரணிலை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கியதும், மீண்டும் நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர் பிரதமராக நியமிக்கப்பட்டது சமீபத்தில் நிகழ்ந்தவை.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று அதிபர் சிறிசேனா தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், போதைக் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டே விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஆயுதங்களை வாங்கினார் என்றும் குற்றம்சாட்டினார். இதற்கிடையே, போதைக் கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபணமானால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(ஜூலை2) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நிதியமைச்சர் மங்கள சமரவீரா கூறுகையில், ‘‘மரண தண்டனை விதித்தால், சர்வதே அளவில் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஐரோப்பிய கூட்டமைப்பின் ஜிஎஸ்பி, வர்த்தகத்தை இழக்க நேரிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனாலும், சிறிசேனா கூறுகையில், ‘‘ஜனாதிபதியாக எனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, போதைக்கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளேன். நீதிமன்றத்தில் இது தொடர்பாக உள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.
இதற்கிடையே, ‘‘நமது நாடு நாகரீகமான முறையி்ல்தான் செயல்பட வேண்டும். மரணதண்டனையை நாம் அனுமதிக்கவே கூடாது’’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.