இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராக மகிந்த ராஜபக்ச இருக்கிறாரா என்ற சட்டரீதியான கேள்வியும் எழுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன கோரிக்கை விடுத்திருந்தன.
இதனால், உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்தக் குழப்பத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இரண்டாவது பெரிய கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவர் என்று அறிவித்துள்ள சபாநாயகர், அவர் இன்னமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராக இருப்பதை அந்தக் கட்சி உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியில் அவரது உறுப்புரிமையை உறுதிப்படுத்துவது, சபாநாயகர் செயலகத்தின் வேலையல்ல என்றும், அவர் அறிவித்துள்ளார். இதனால், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தப் பதவியை இழந்துள்ளார்.