வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முதல்முறையாக தமிழரை நியமித்தார் சிறிசேன

Sirisena appoints Tamil as Northern Province.Governor

by Mathivanan, Jan 7, 2019, 18:13 PM IST

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு, முதல் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி சுரேன் ராகவன் என்ற மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரே, வடக்கு மாகாணத்துக்கான ஆளுநராக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், 2015 இல் இலங்கையின் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் ஒன்பது பேரையும், கடந்த டிசெம்பர் 31ஆம் தேதியுடன் பதவியில் இருந்து விலகுமாறு, அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான ஆளுநர்களாக, தனக்கு நெருக்கமானவர்களை அதிபர் சிறிசேன நியமித்திருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தவரும், கருத்துக்களை வெளியிட்டு வருபவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் அரசியல் கட்சிகள், பிரமுகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

அதேவேளை, வடக்கு உள்ளிட்ட ஏனைய நான்கு மாவட்டங்களுக்குமான ஆளுநர்கள் நியமிப்பதில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.

வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு, வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி கே.விக்னேஸ்வரன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் என்ற மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரை அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நியமித்துள்ளார்.

இவர், அதிபர் ஊடகப் பிரவின் பணிப்பாளராகவும், அதிபரின் ஆலோசகராகவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

வடக்கு மாகாணம் உருவாக்கப்பட்ட பின்னர், சிங்களவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். முதல்முறையாக தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

You'r reading வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முதல்முறையாக தமிழரை நியமித்தார் சிறிசேன Originally posted on The Subeditor Tamil

More Srilanka news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை