அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம், பீகார், அசாம் போன்ற வட மாநிலங்களில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. அசாம், பீகாரில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளன. அசாம் மற்றும் பீகாரில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 28 மாவட்டங்களில் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவீதம் வெள்ள நீரில் மிதக்கின்றன. கடந்த 2 நாட்களில் 17 வன விலங்குகள் உயிரிழந்துவிட்டன.
இந்நிலையில், பீகாரில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் 26 குழுக்களாக பிரிந்து வெள்ள நிவாரணப் பணி கீழ் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறுகையில், ‘‘பேரிடர் மீட்பு படைகள் 26 குழுக்களாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது வரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 199 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக கிடைத்த தகவலின்படி 25 பேர் உயிரிழந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
அதே சமயம், வெள்ள நிவாரணப் பணிகளை நிதிஷ்குமார் அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்று கூறி, ராப்ரிதேவி தலைமையில் ஆர்ஜேடி கட்சியினர் சட்டசபைக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தினர்.