ஜோலார்பேட்டை வாட்டர் எக்ஸ்பிரஸ் கிளம்பியாச்சு- சென்னைவாசிகளின் தாகம் தீருமா?

by Nagaraj, Jul 12, 2019, 09:18 AM IST
Share Tweet Whatsapp

சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் கீழ் 27 லட்சம் லிட்டர் குடிநீருடன் முதல் ரயில் இன்று புறப்பட்டது.

சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டது. இதனால் குடிநீருக்காக சென்னை வாசிகள் காலிக்குடங்களுடன் தவியாய்த் தவிக்கும் அவலம் ஏற்பட்டது.

எப்படியும் மழை பெய்து விடும். நிலைமை சீராக விடும் என அலட்சியம் காட்டிய தமிழக அரசு, தண்ணீர் பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட் டங்களை கையிலெடுக்கவும் சுதாரித்தது. குடிநீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி கூடுதல் நிதியும் ஒதுக்கப் பட்டது.

இதில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் ஜரூராக நடைபெற்றது.மேட்டுச் சக்கரகுப்பம் என்ற இடத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை 3 கி.மீ.தொலைவுக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரயில் டாங்கர்களில் தண்ணீர் நிரப்பும் பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து 50 டாங்கர்களில் தலா 54 ஆயிரம் லிட்டர் என 27 லட்சம் லிட்டர் குடிநீருடன் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை ரயில் புறப்பட்டது.இந்த ரயில் 4 மணி நேரத்தில் அம்பத்தூர் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின் சென்னை மக்களுக்கு ஜோலார்பேட்டை குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்த 50 டாங்கர்களுடன் கூடிய சிறப்பு ரயில் ஒன்றும் வரவழைக்கப்பட்டு, தினமும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசை விமர்சித்த கிரண்பேடிக்கு கண்டனம்... திமுக வெளிநடப்பு


Leave a reply