கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடிக்கும் என்றே தெரிகிறது.உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசும், குமாரசாமியும் தொடர்ந்துள்ள வழக்கை காரணம் காட்டி இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதப்படுத்தப்படும் என்றே தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தால் பெரும்பான்மை இழந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எந்த வகையிலாவது சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில், மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.
ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அவர்களை சரிக்கட்ட முடியாமல் காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் திண்டாட்டத்துக்கு ஆளாகி விட்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல் விடுத்தும், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை காரணம் காட்டி மசிய மறுக்கின்றனர்.
இதனால் கடந்த 18-ந் தேதி முதல்வர் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்த போதும் வாக்கெடுப்புக்கு தயாராகாமல் விவாதம் என்ற பெயரில் உ நாட்களை கடத்தி விட்டனர். ஆளுநர் வஜுபாய் வாலா 2 முறை கெடு விதித்தும், அதனை குமாரசாமி நிராகரித்து விட்டார்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை விவாதம் நீடித்தது. கடைசியில் அரசியல் கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை உச்ச நீதிமன்ற உத்தரவு பறிப்பதாகக் கூறி பிரச்னை எழுப்பினர். இதனால் கொறடா உத்தரவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை தெளிவு படுத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளதை காரணம் காட்டி, அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கச் செய்து விட்டனர். இதனால் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் குமாரசாமி அரசுக்கு மேலும் அவகாசம் கிடைத்தது.
இந்த இரு நாட்களிலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைப்பதற்கான வியூகங்களை காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் மேற்கொண்டனர். அதில், அதிருப்தி எம்எல்ஏக்களை சரிக்கட்ட முடியுமென்றால் முதல்வர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கவும் தயார் என குமாரசாமி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சட்டப் பேரவை மீண்டும் கூட உள்ள நிலையில், இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொறடா உத்தரவு பற்றி தெளிவான விளக்கம் கேட்டு கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தொடர்ந்த வழக்கு மற்றும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் விவகாரத்தில் கவர்னர் ‘கெடு‘ விதித்ததை எதிர்த்து முதல்வர் குமாரசாமி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடும் என்று காங்கிரஸ்- மஜத தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இன்றும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் விவாதம் என்ற பெயரில் இழுத்தடிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
ஆளுநர் கெடு முடிந்தது; கர்நாடக சட்டசபையில் வாக்கெடுப்பு தாமதம்..! அடுத்தது என்ன?