புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு சூர்யாவுக்கு ரஜினி பாராட்டு..! வைகோ, வைரமுத்து, சீமானும் ஆதரவு

Super star Rajinikanth welcomes actor Suryas comments on new education policy

by Nagaraj, Jul 22, 2019, 10:02 AM IST

புதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது. பேருந்து வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலைமை உருவாகும் என்று சூர்யா தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, கிராமப்புற கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வித் தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் சாடியிருந்தார்.

இதனால் புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பெருமளவில் பாராட்டுகள் குவிந்தாலும், பாஜக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. ஆனாலும் சூர்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலரும் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சூர்யா, மோகன்லால், ஆர்யா ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றிரவு நடைபெற்றது.இதில் பங்கேற்றுப் பேசிய ரஜினி, நடிகர் சூர்யாவையும், அவருடைய தந்தை சிவக்குமாரையும் வெகுவாகப் புகழ்ந்தார்.

அவர் பேசுகையில், சிவக்குமாருடன் கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய படங்களில் நடித்தேன். சூட்டிங் ஸ்பாட்டில் எந்த நடிகையுடனும், வேறு பெண்களிடமும் என்னை அவர் பேசவே விடமாட்டார். ஏதாவது படி, எழுது என்று சொல்வார். நேருக்கு நேர் படத்தை பார்த்தபோது, சூர்யா எப்படி ஒரு நடிகராக முடியும் என்று சந்தேகப்பட்டேன். இப்போது அவர் நல்ல நடிகராகிவிட்டார். புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா கருத்து  எழுப்பிய கேள்விகளை நான் வரவேற்கிறேன். அவர் சொன்ன விஷயங்களை சர்ச்சைக்குள்ளாக்கி விட்டனர் என்றாலும், தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்ததால் இப்படி சொல்லியிருக்கிறார். இதுபற்றி நான் பேசினால்தான் பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பலர் சொன்னார்கள். சூர்யா பேசியது கூட மோடிக்கு கேட்டுவிட்டது என ரஜினி பாராட்டினார்.

இதே விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்துவும் சூர்யாவின் கருத்தை வரவேற்றுப் பேசினார். மேலும் இளைய தலைமுறை பாடலாசிரியர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்களை எழுத வேண்டும் என வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார்.
இதே போல் சூர்யாவின் கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை

 

You'r reading புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு சூர்யாவுக்கு ரஜினி பாராட்டு..! வைகோ, வைரமுத்து, சீமானும் ஆதரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை