அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகணும் கர்நாடக சபாநாயகரின் அடுத்த அதிரடி

Karnataka speaker summons to rebel MLAs to appear before him on tomorrow morning

by Nagaraj, Jul 22, 2019, 12:19 PM IST

ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அடுத்த அதிரடி ஆயுதத்தை தொடுத்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கடந்த 3 வாரங்களாக அம்மாநில அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் மெஜாரிட்டி இழந்து, குமாரசாமி அரசு பதவி இழக்கும் நிலை உள்ளது. ஆனால் குமாரசாமி அரசு கவிழ்ந்து விடாமல் இருக்க, சபாநாயகர் ரமேஷ்குமார் முட்டுக் கொடுத்து வருகிறார் என்றே கூறலாம்.

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் சட்ட விதிகளில் தமக்குள்ள அதிகாரங்களை சுட்டிக்காட்டி ராஜினாமாவை ஏற்காமல் போக்குக் காட்டி வருகிறார். உச்ச நீதிமன்றமும் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது. ஆனாலும், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது என அவர்களுக்கு சாதகமாக ஒரு உத்தரவையும் உச்ச நீதிமன்றம் போட்டது தான் இப்போது பெரும் சர்ச்சையாகி விட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவே, இப்போது குமாரசாமி அரசு நம்பிக்கை, வாக்கெடுப்பை காலம் தாழ்த்துவதற்கும் ஏதுவாக அமைந்து விட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கும் உரிமையை உச்ச நீதிமன்ற உத்தரவு பறிப்பதாக உள்ளது என பிரச்னை எழுப்பி, காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மேலும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் தலைவர்கள் கடிதம் கொடுத்திருந்தனர். இந்தக் கடிதத்தை கையில் எடுத்துள்ள சபாநாயகர், அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மும்பையில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை பெங்களூருக்கு வந்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெங்களூரு வரும் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு, அரசைக் காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் பகீரத முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்றும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என்றே தெரிகிறது.

குமாரசாமி அரசு மேலும் 2 நாள் தப்பித்தது; வாக்கெடுப்பு 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

You'r reading அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகணும் கர்நாடக சபாநாயகரின் அடுத்த அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை